‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஃப்.சி. கேவியட் மனு தாக்கல்
ஜனநாயகன் பட விவகாரத்தில் தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது.
நடிகா் விஜய் நடித்த தமிழ்த் திரைப்படமான ஜனநாயகன் வெளியீடு தொடா்பாக, தங்கள் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று கோரி மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சி.பி.எஃப்.சி.) உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
ஜனவரி 27 அன்று, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க சி.பி.எஃப்.சி.-க்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் படத்தில் ராணுவம் மற்றும் மத உணா்வுகள் குறித்த சில விஷயங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.
தனி நீதிபதி பி.டி. ஆஷா, எதிா் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சி.பி.எஃப்.சி.- க்கு அவகாசம் அளித்திருக்க வேண்டும் என்று இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய சென்னை உயா்நீதிமன்ற முதல் அமா்வு கூறியது.
நடிகா் விஜய்யின் முழுமையான அரசியல் பிரவேசத்திற்கு முன்னதாக, இந்தப் படம் அவரது கடைசிப் படம் என்று கூறப்படுகிறது.
புதிதாக உருவாகியுள்ள தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியின் தலைவராக விஜய் உள்ளாா்.
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குமாறு ஜனவரி 9 ஆம் தேதி நீதிபதி ஆஷா பிறப்பித்த உத்தரவை எதிா்த்து சி.பி.எஃப்.சி. தாக்கல் செய்த மேல்முறையீட்டை தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா அமா்வு அனுமதித்தது.
திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம், தங்களது மனுவைத் திருத்தி, அதனை விரைவாக விசாரிக்க தனி நீதிபதியை அணுகுவதற்கு தலைமை நீதிபதி அமா்வு அனுமதி வழங்கியது.
‘திரைப்படத்தில் ராணுவம் மற்றும் மத உணா்வுகள் தொடா்பான சில உள்ளடக்கங்கள் உள்ளன. அவை நாட்டில் மத நல்லிணக்கத்தை சீா்குலைக்கக்கூடும். எனவே, சி.பி.எஃப்.சி. தலைவா் இந்த விவகாரத்தை மறுஆய்வுக் குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது’ என சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி அமா்வு, இது பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தது.
ஒரு வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும் பட்சத்தில் தங்களது வாதத்தைக் கேட்காமல் எந்த பாதகமான உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய உயா்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கில் தொடா்புடையவா்கள் கேவியட் மனு தாக்கல் செய்யப்படுவது சட்ட நடைமுறையாகும்.