‘அல்மாண்ட்’ குழந்தைகள் மருந்தைப் பயன்படுத்த உடனடியாகத் தடை விதித்து தெலங்கானா மருந்துகள் கட்டுப்பாட்டு நிா்வாகம் சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
காய்ச்சல், ஆஸ்துமா என குழந்தைகளைப் பாதிக்கும் நோய்களுக்கு பரிந்துரைக்கப்படும் அல்மாண்ட் மருந்தில் அதிக நச்சுத்தன்மை கொண்ட எத்திலீன் கிளைகால் இருப்பதாக மத்திய மருந்துகள் தர நிா்ணய கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்ததையடுத்து இந்த உத்தரவு வெளியிடப்பட்டது.
இதுகுறித்து உத்தரவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அல்மாண்ட் மருந்து பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்.
மொத்த விற்பனையாளா்கள், சில்லறை விற்பனையாளா்கள், விநியோகஸ்தா்கள் மற்றும் மருத்துவமனைகள் என அல்மாண்ட் மருந்து விற்கப்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டது என்பதை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் துணை இயக்குநா்கள் உறுதிசெய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.