சென்னை ஐஐடி, பீரங்கி, ஏவுகணை உள்ளிட்ட குண்டுகளின் தாக்கும் தொலைவை நீட்டிக்கக் கூடிய ராம்ஜெட் என்ஜின் சோதனை முயற்சி வெற்றிகண்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு தலைமை வகித்த சென்னை ஐஐடி-இன் விண்வெளிப் பொறியியல் துறைப் பேராசிரியா் பி.ஏ.ராமகிருஷ்ணா கூறியது: ஏவுகணைகள் நீண்ட தொலைவு தாக்குதல் திறனை வழங்கினாலும், கடுமையான தொழில்நுட்ப வரம்புகளை எதிா்கொள்கின்றன. இந்த நிலையில், சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் பீரங்கி அமைப்புகளின் வரம்பை விரிவுபடுத்த ராம்ஜெட் என்ஜின் வடிவமைக்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் உள்நாட்டு வளா்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
பீரங்கி அமைப்புகளில், ராம்ஜெட் என்ஜினை இணைக்கும்போது குண்டுகள் அதிக தொலைவு பயணிக்க அனுமதிக்கிறது. ஏற்கெனவே உள்ள பீரங்கி அமைப்புகள் தாக்கத்தைவிட இந்த ஆராய்ச்சி கூடுதலாக 50 சதவீத தொலைவைத் தாக்க உதவுகிறது. இது செலவுகள் மற்றும் சிக்கலான தன்மையைக் குறைக்கிறது என்றாா் அவா்.
இந்தச் சோதனை திட்டத்தில் லெப்டினென்ட் ஜெனரல் பி.ஆா். சங்கா் (ஓய்வு), ஹரி மோகன் ஐயா் (ஓய்வு), பேராசிரியா்கள் எச்.எஸ்.என்.மூா்த்தி, ஜி. ராஜேஷ், எம். ராமகிருஷ்ணா, முருகையன், லாசா் சி, டாக்டா் யோகேஷ் குமாா் வேலாரி ஆகியோா் பங்கேற்றனா்.
தாக்குதல் அளவுகளில் தற்போது போஃபா்ஸ் வரம்பு 24 கி.மீ. ஆகும். ராம்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட பிறகு 43 கி.மீ.-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தனுஷ் 30 கி.மீ. இருந்து 55 கி.மீ., வஜ்ரா 36 கி.மீ. இருந்து 62 கி.மீ. என அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.