ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்து 5 மாதங்களுக்குமேல் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வந்தார்.
முன்னதாக உழைப்போர் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த 1,400 தூய்மைப் பணியாளர்கள், கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அம்பத்தூர், கல்யாணபுரம் பகுதியில் உள்ள உழைப்போர் உரிமை இயக்க அலுவலகத்தில் 12 பெண் தூய்மைப் பணியாளர்கள், 3 கட்டங்களாக 57 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு சந்தித்து பேச்சு நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, உழைப்போர் உரிமை இயக்க அலுவலகம் உள்பட 5 இடங்களில் பேச்சு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, 1,396 தூய்மைப் பணியாளர்கள் 5 குழுக்களாக பிரிந்து காத்திருந்தனர். திங்கள்கிழமை காலை உழைப்போர் உரிமை இயக்க அலுவலகத்துக்கு அமைச்சர் சேகர்பாபு வந்தார்.
அவரிடம் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ் மீண்டும் தங்களுக்கு பணி வழங்க வேண்டும். நாளொன்றுக்கு ரூ.761 ஊதியம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தூய்மைப் பணியாளர்கள் முன்வைத்தனர்.
உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் பாரதி உடனிருந்தார். அமைச்சர் சேகர்பாபு, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
பின்னர், செய்தி செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியது: தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சி எடுத்த விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநிலச்செயலர் சண்முகம், முத்தரசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இந்த மாத இறுதிக்குள், அனைவரும் மாநகராட்சியின்கீழ் மீண்டும் பணியமர்த்தபடுவர்.
ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ஊதியதை மீண்டும் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும். சட்டத்துக்குட்பட்டு, எங்களால் முடிந்ததை செய்வோம் என்றார்.
தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு பழச்சாறு வழங்கி உண்ணாவிரதப் போராட்டத்தை அமைச்சர் சேகர்பாபு முடித்து வைத்தார்.
மேயர் ஆர்.பிரியா, அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மண்டலக் குழுத் தலைவர் பி.கே. உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.