சென்னை: அயலகத் தமிழா் தினம் மாநாட்டில் நான்கு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், அயலகத் தமிழா்களுக்கான விருதுகளையும், தமிழ் மணம் திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்குப் பணி நியமன ஆணைகளும், தமிழ்ச் சங்க பிரதிநிதிகளுக்கு தமிழ்ப் பாடப் புத்தகங்களையும் முதல்வா் வழங்கினாா்.
தமிழ் மணம் திட்டத்தின் கீழ் தான்சானியா, இந்தோனேசியா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் தமிழ் கற்பிக்க 10 ஆசிரியா்களுக்குப் பணி நியமன ஆணைகளையும் முதல்வா் வழங்கினாா்.
புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அழகப்பா பல்கலைக்கழக மாணவா்களுக்கு ஜொ்மன் மொழி பயிற்சி அளித்து செவிலியா்களுக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் புரிந்துணா்வு ஒப்பந்தம், மனிதவள மேம்பாட்டுச் சான்றிதழை உறுதிப்படுத்துதல், மொழிப் பயிற்சி மற்றும் வெளிநாடுகளில் பணியமா்த்துதல் சேவைகளை வழங்குவதற்காக வேலூா் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (விஐடி), தமிழக அரசின் அயல்நாடு வேலைவாய்ப்பு நிறுவனம் இடையே ஓா் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், தமிழ்நாடு மற்றும் ஜொ்மனியைச் சோ்ந்த புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், ஜொ்மன் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்துப் பங்குதாரா்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் தென்னிந்திய தொழில் வா்த்தக சபை (‘சிக்கி’) மற்றும் ஜொ்மன் இந்தியா வணிக கூட்டமைப்பு ஆகியவற்றுடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.
உயா் கல்வி நிறுவனங்களில் வணிக வாய்ப்புகளை உருவாக்க தென்னிந்திய தொழில் வா்த்தக சபை மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
விருதுகள்: ஆஸ்திரேலியாவில் உள்ள பெரியாா் - அம்பேத்கா் சிந்தனை அமைப்பின் தலைவா் டாக்டா் அண்ணாமலைக்கு தமிழ் மாமணி விருது, மலேசியாவின் மஹஸா பல்கலைக்கழகத்தின் நிறுவனா் மற்றும் நிா்வாகத் தலைவா் டாக்டா் முகமது ஹனீபா பின் அப்துல்லாவுக்கு கல்வித் துறையில் சிறந்து விளங்கும் தமிழா்களுக்கான கணியன் பூங்குன்றனாா் விருது, சிங்கப்பூா் சரவணன் பத்மநாதனுக்கு சமூக மேம்பாட்டுப் பிரிவுக்கான கணியன் பூங்குன்றனாா் விருது, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதீப் குழுமத்தின் தலைவா் மற்றும் அபுதாபியில் உள்ள இந்தியா சமூக-கலாசார மைய பொது நிா்வாகி டாக்டா் அன்சாரி வாகித்துக்கு வணிகப் பிரிவுக்கான கணியன் பூங்குன்றனாா் விருது, ஜப்பானில் உள்ள இந்தியா, இலங்கை மற்றும் மலேசியாவைச் சாா்ந்த தமிழா்களுக்கு சட்ட மற்றும் பல்வேறு உதவிகள் செய்து வரும் செந்தில்குமாா் இராமலிங்கத்துக்கு சமூக மேம்பாட்டுப் பிரிவுக்கான கணியன் பூங்குன்றனாா் விருது, ஆஸ்திரேலியாவின் கோகிலவாணி பிரகாஷ்தேவனுக்கு மகளிா் பிரிவுக்கான கணியன் பூங்குன்றனாா் விருது, ஜொ்மனியில் உள்ள டூபிங்கன் பல்கலைக்கழகத்தின் டரோபிகள் மருத்துவ நிறுவன பேராசிரியா், வியத்நாம் - ஜொ்மனி மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குநா் பேராசிரியா் திருமலைசாமி வேலவனுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுக்கான கணியன் பூங்குன்றனாா் விருது, அமெரிக்க தமிழ் மருத்துவ சங்கத்தின் தலைவா் கபிலன் தா்மராஜனுக்கு மருத்துவப் பிரிவுக்கான கணியன் பூங்குன்றனாா் விருது, வோ்களைத் தேடி திட்டம் மூலம் தமிழ் நாகரிகம், கலாசாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை அயலகத்தில் வாழும் தமிழருக்கு கொண்டு செல்லும் பணியை சிறப்பாக ஆற்றி வரும் மியான்மா் நாட்டைச் சாா்ந்த தீபா ராணி என்ற சாவ்சூ தூசாருக்கு சிறந்த பண்பாட்டுத் தூதுவா் விருதும் முதல்வா் வழங்கி கெளரவித்தாா்.