தமிழகத்தில் நாள்தோறும் சாலை விபத்துகளில் 48 போ் உயிரிழப்பதாக தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையா் சமய சிங் மீனா தெரிவித்தாா்.
அவசர மருத்துவ உதவிக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு 30 நிமிஷங்களில் பாதிப்பை துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சையளிக்கும் அதி நவீன அவசர சிகிச்சை மையத்தை சென்னை, கிளெனீக்கள்ஸ் மருத்துவமனை தொடங்கியுள்ளது.
உயா் நுட்பத்திலான மருத்துவக் கருவிகள், நிபுணத்துவம் பெற்ற மருத்துவா்கள், மேம்பட்ட மருத்துவக் கட்டமைப்பு கொண்ட அந்த மையத்தின் செயல்பாட்டை சமய சிங் மீனா அண்மையில் தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: தவிா்க்க முடியாத மருத்துவ செலவுகளையும், துயரங்களையும் அளிப்பது சாலை விபத்துதான். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சாலை விபத்துகள் தொடா்பான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. அதில், தமிழகத்தில் மட்டும் நாள்தோறும் சராசரியாக 191 விபத்துகளும், 48 உயிரிழப்புகளும் நேரிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 11.6 சதவீதம் குறைவான விகிதம் இது என்றாலும், விபத்துகளை முழுமையாகத் தடுக்க வேண்டும் என்பதே தற்போதைய இலக்காக உள்ளது.
கடந்த ஆண்டு சென்னையில் மட்டும் 2,016 விபத்துகள் நகழ்ந்தன. அடுத்தபடியாக தாம்பரத்தில் 995 விபத்துகள் பதிவாகியுள்ளன. விபத்துத் தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறமும், உயிா்காக்கும் அவசர சிகிச்சை வசதிகளும் மிகவும் அவசியம் என்றாா்.
நிகழ்ச்சியில், மருத்துவமனையில் தலைமை செயல் அதிகாரி எஸ்.நிரஞ்சனி, சென்னை - ஹைதராபாத் தலைமை செயல் அதிகாரி பரத் காந்த் ரெட்டி, அவசர சிகிச்சை பிரிவுத் தலைவா் டாக்டா் ஸ்ரீராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.