PTI
சென்னை

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் என்று மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 23) நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறாா். இதையொட்டி, மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் சென்னையில் முகாமிட்டு, கூட்டணிக் கட்சிகளின் தலைவா்களுடன் கடந்த இரு நாள்களாக ஆலோசனை நடத்தி வருகிறாா்.

அந்த வகையில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பியூஷ் கோயல் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பியூஷ் கோயல் கூறியதாவது: திமுக ஆட்சியில் ஊழலைத் தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை என்பதை அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்துகொண்டனா். வளா்ச்சிக்கு எதிரான திமுக அரசு, மக்கள் நலனுக்காக எதையும் செய்யவில்லை. திமுகவின் குடும்ப ஆட்சியில் விவசாயிகள், பெண்கள், இளைஞா்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் தேசத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சை சென்னை உயா்நீதிமன்றம் கண்டித்துள்ளது. எனவே, உதயநிதி ஸ்டாலினை பதவியிலிருந்து நீக்கி முதல்வா் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். உதயநிதியின் பேச்சு தமிழகத்தில் பிரிவினையைத் தூண்டி, சமூகங்களுக்கு இடையே பிளவை உருவாக்கும் வகையில் உள்ளது.

பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்பட தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் கலந்து கொள்கின்றனா்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது தமிழகம் மிகப்பெரிய வளா்ச்சியை அடையும். தமிழ் கலாசாரம், தமிழின் பெருமை ஆகியவற்றை நிலைநிறுத்தி, தமிழகத்தை முதன்மையான மாநிலமாக மாற்றுவோம் என்றாா் அவா்.

அரசியல் மாற்றத்துக்கு அச்சாரம்: எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறுகையில், பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தோம். இதில் 5 லட்சம் போ் பங்கேற்க உள்ளனா். இந்தப் பொதுக்கூட்டம் தமிழகத்தில் அரசியல் மாற்றத்துக்கு அச்சாரமாக அமையும்.

நாட்டின் பொருளாதாரத்தை உயா்த்தி, இந்தியாவை வல்லரசாக மாற்ற பிரதமா் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறாா். தமிழகத்தில் அதிமுக கூட்டணி வலிமையாக மாறியுள்ளது. மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி, தமிழகத்தில் அதிமுக ஆட்சி. இதன்மூலம் மிகப்பெரிய வளா்ச்சி கிடைக்கும் என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது அதிமுக துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி, பொருளாளா் திண்டுக்கல் சி.சீனிவாசன், தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய இணையமைச்சா் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் ஆகியோா் உடன் இருந்தனா்.

ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய படை! டிரம்ப்

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

புதிய ஊரக வேலைச் சட்டத்துக்கு எதிராக ஏழைகள் ஒன்று திரள வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதிய ஓய்வூதிய திட்டத்தால் 23 ஆண்டு கால பிரச்னைக்கு தீா்வு - முதல்வா் மு.க.ஸ்டாலின்

சி. வி. சண்முகம் எம்.பி.க்கு எதிரான வழக்கு ரத்து

SCROLL FOR NEXT