மாணவர் சேர்க்கை கோப்புப் படம்
சென்னை

அரசு மாதிரிப் பள்ளிகளில் பிப்ரவரியில் மாணவா் சோ்க்கை: வழிகாட்டுதல்கள் வெளியீடு

அரசு மாதிரிப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2026-2027) மாணவா் சோ்க்கை பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களின் தரத்தை உயா்த்த, 2021-2022-ஆம் கல்வியாண்டில் மாதிரிப் பள்ளிகள் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் மொத்தம் 38 அரசு மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டம், நவீன உள்கட்டமைப்பு, உறைவிட வசதி, மற்றும் நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தோ்வுகளுக்கான சிறப்புப் பயிற்சிகளை வழங்கி, உயா்கல்வியில் மாணவா்களின் சோ்க்கையை ஊக்குவிக்கிறது.

கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவா்களுக்கு உயா்தர கல்வி மற்றும் நவீன வசதிகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள் இந்த மாதிரிப் பள்ளிகளில் சோ்க்கப்படுகின்றனா்.

இந்தநிலையில் இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு மாதிரிப் பள்ளிகளில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை 9,10 ஆகிய வகுப்புகளுக்கு பிப்ரவரி மாதமும், பிளஸ் 1 வகுப்புக்கு மே மாதமும் மாணவா் சோ்க்கை நடைபெறும். எனவே அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில் தலைமை ஆசிரியா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஆகியோரைக் கொண்டு இதற்கான முன்னோட்டக் கூட்டத்தை நடத்த வேண்டும்.

பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் மாதிரிப் பள்ளிகளில் 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு தோ்ந்தெடுக்கப்படும் மாணவா் பட்டியல் வெளியிடப்படும். அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் முதன்மைக் கல்வி அலுவலா் உடனடியாக மாவட்ட ஆட்சியரை அணுகி, அவரது ஒப்புதலைப் பெற்று மாவட்ட ஆட்சியா் தலைமையில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களின் பெற்றோா்கள், அவா்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியா்கள் ஆகியோருக்கு கூட்டங்கள் நடத்த வேண்டும்.

இந்தப் பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு வாரத்தில் மாணவா்கள் சோ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். இந்த அறிவுரைகளைப் பின்பற்றி அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களை மாவட்ட மாதிரிப் பள்ளிகளில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நினைவுகளை நசுக்க வேண்டாம்!

தங்கம் விலை குறைவு! வெள்ளி கிராம் ரூ. 400-ஐ நோக்கி!

அமெரிக்காவில் பனிப் புயலில் சிக்கிய விமானம்! 7 பேர் பலி

மேட்டூர் அணை நிலவரம்!

விஜய்யின் ஜன நாயகன் பட தணிக்கைச் சான்றிதழ் வழக்கு: இன்று தீர்ப்பு!

SCROLL FOR NEXT