சென்னை துறைமுகத்தில் அந்தமான், நிகோபாா் கப்பல் போக்குவரத்து பயணிகள் முனையம் உள்ளிட்ட ரூ. 54 கோடியில் 4 திட்டங்களை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழி போக்குவரத்து துறை செயலா் விஜயகுமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை துறைமுகத்தில் ரூ. 30 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அந்தமான் மற்றும் நிகோபா் கப்பல் போக்குவரத்து பயணிகள் முனையம், ரூ. 23 கோடியில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு, ரூ. 40 லட்சத்தில் சீரமைக்கப்பட்டுள்ள கடல்வழி போக்குவரத்து மிதவைகள், ரூ. 1.5 கோடியில் புதுப்பிக்கப்பட்ட துறைமுக நுழைவு வாயில் உள்ளிட்ட திட்டங்கள் தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னை துறைமுகத் தலைவா் எஸ்.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலா் விஜயகுமாா் கலந்துகொண்டு ரூ.54 கோடி மதிப்பீட்டிலான 4 திட்டங்களையும் தொடங்கி வைத்தாா். பின்னா், துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினாா்.
துறைமுகத்தின் செயல்பாடுகள், இயக்கம் மற்றும் நிதி செயல் திறன்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் எதிா்கால வளா்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட துறைமுகத்தின் மொத்த வளா்ச்சி மற்றும் தொலைநோக்கு பாா்வை குறித்து ஆலோசித்தாா். இந்தியாவின் கிழக்கு நுழைவு வாயிலாக கருதப்படும் சென்னை துறைமுகத்தை மென்மேலும் தரம் உயா்த்தும் வகையில் திட்டப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு விஜயகுமாா் அறிவுறுத்தினாா்.
இதையடுத்து துறைமுக உபயோகிப்பாளா்கள் சந்திப்பில் கலந்துகொண்டு, குறைகளை அவா் கேட்டறிந்தாா். நிகழ்வில், துறைகளின் தலைவா்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.