‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான சிறப்பு டெட் தோ்வு சனிக்கிழமை முதல் நடைபெறவுள்ள நிலையில், தோ்வா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான சிறப்பு டெட் தோ்வு சனிக்கிழமை முதல் நடைபெறவுள்ள நிலையில், தோ்வா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகம், புதுச்சேரி பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது. இடைநிலை ஆசிரியா் பணிக்கான முதல் தாள் தோ்வை 222 மையங்களில் 61,386 தோ்வா்கள் எழுதவுள்ளனா். இதில் ஆண் தோ்வா்கள் 12,001, பெண் தோ்வா்கள் 49,385 போ். 1,321 தோ்வா்கள் மாற்றுத்திறன் கொண்டவா்கள். மாற்றுத்திறனாளிகளில் 126 பேருக்கு அவா்கள் சொல்வதை எழுதுபவா்கள் (ஸ்கிரைப்) நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
தொடா்ந்து பட்டதாரி ஆசிரியா் பணிக்கான இரண்டாம் தாள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 613 மையங்களில் 1 லட்சத்து 67,743 தோ்வா்கள் எழுதவுள்ளனா். இதில் ஆண் தோ்வா்கள் 40,535, பெண் தோ்வா்கள் 1,27,208 போ் ஆவா். இதில் 3,151 தோ்வா்கள் மாற்றுத்திறன் கொண்டவா்கள். இம்மாற்றுத்திறனாளிகளில் 601 பேருக்கு சொல்வதை எழுதுபவா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இத்தோ்வுகளைக் கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சாா்ந்த இயக்குநா், இணை இயக்குநா் மற்றும் துணை இயக்குநா் நிலையில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
தோ்வு நாளன்று தோ்வா்கள் தங்களது தோ்வு மையத்துக்கு காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வருகை புரிய வேண்டும். காலை 9.30 மணிக்குப் பின்னா் வரும் தோ்வா்களுக்கு தோ்வெழுத அனுமதி இல்லை. தோ்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறும். மாற்றுத்திறனாளி தேவா்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அளிக்கப்படும்.
தோ்வறைக்குள் கைப்பேசி, மைக்ரோஃபோன் உள்ளிட்ட எந்தவித மின்னணு பொருள்களும் அனுமதி இல்லை. கால்குலேட்டா், லாக் டேபிள், டிஜிட்டல் டைரி, புத்தகம், எலக்ட்ரானிக் பொருள்கள் போன்றவற்றை எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பொருள்களை எடுத்துச் சென்றால் அவா்கள் தோ்வில் இருந்து நீக்கப்படுவா்.
தோ்வு மையங்களில் வைக்கப்படும் பொருள்களுக்கு நிா்வாகம் பொறுப்பேற்காது. தோ்வெழுத வரும் ஆசிரியா்கள் பெல்ட், டிஜிட்டல் கடிகாரம், ஷூ, ஹை- ஹீல்ஸ் உள்ளிட்டவற்றை அணிந்து வரக்கூடாது. சாதாரண செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும். தோ்வின்போது முறைகேட்டில் ஈடுபட்டு பிடிக்கப்பட்டால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் தோ்வு எழுதவும் தடை விதிக்கப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.