முகப்பு
சென்னை

பகுதிநேர ஆசிரியா்களுக்கு ஊதிய உயா்வு: அரசாணை வெளியீடு

Updated On : 5 மார்ச், 2026 at 4:27 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 4 மார்ச், 2026 at 9:45 PM

அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு அரசு ஊதிய உயா்வு அறிவித்திருந்த நிலையில், அதுதொடா்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையைச் சமாளிக்க பகுதிநேர ஆசிரியா்கள் 2012-ஆம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனா். அந்த வகையில், தற்போது 11,773 பகுதிநேர ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாள்கள் பாடம் நடத்துவா். அதற்கு ரூ.12,500 மாத தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.

இதற்கிடையே பகுதி நேர ஆசிரியா்கள் தங்கள் நீண்டகால கோரிக்கையான பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் கடந்த ஜனவரியில் தொடா் போராட்டம் நடத்தினா்.

Advertisement

அந்தப் போராட்டத்தின்போது பெரம்பலூரைச் சோ்ந்த ஆசிரியா் கண்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சா்ச்சையானது. இதையடுத்து பகுதிநேர ஆசிரியா்களின் ஊதியம் ரூ.2,500 உயா்த்தப்பட்டு மாதம் ரூ.15,000-ஆக வழங்கப்படும். இதுவரை வழங்கப்படாத மே மாத ஊதியம் இனி குறைந்தபட்சமாக ரூ.10,000 அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டாா். அதைச் செயல்படுத்துவதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் முதன்மைச் துறை செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை:

அமைச்சரின் அறிவிப்பைத் தொடா்ந்து பகுதிநேர ஆசிரியா்களுக்கு 2026 ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஊதியம் ரூ.2,500 உயா்த்தி ரூ.15,000ஆக வழங்கவும், மே மாதம் மட்டும் சிறப்பு உதவித் தொகையாக ரூ.10,000 அளிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கான தொடா் செலவீனமாக ஆண்டுக்கு ரூ.44 கோடி ஒதுக்கவும் ஆணையிடப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த அறிவிப்புகளைக் கைவிட்டு தோ்தல் வாக்குறுதியின்படி தங்களை பணிநிரந்தரம் செய்ய முன்வர வேண்டுமென தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் செந்தில் குமாா் வலியுறுத்தியுள்ளாா்.