முகப்பு
சென்னை

சென்னை ஐஐடியில் 4 புதிய பாடத் திட்டங்கள்

சென்னை ஐஐடியில் செமி கண்டக்டா், ரோபாட்டிக்ஸ் (தானியங்கியல்) போன்ற தொழில்நுட்ப எம்.டெக். பட்டப் படிப்புகளும், பொதுக் கொள்கைக்கான எம்ஏ பட்டப் படிப்புகளும் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன.

Updated On : 20 மார்ச், 2026 at 10:58 PM
சென்னை ஐஐடி
பகிர்:

சென்னை ஐஐடியில் செமி கண்டக்டா், ரோபாட்டிக்ஸ் (தானியங்கியல்) போன்ற தொழில்நுட்ப எம்.டெக். பட்டப் படிப்புகளும், பொதுக் கொள்கைக்கான எம்ஏ பட்டப் படிப்புகளும் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன.

புதிய பாடத்திட்டங்கள் வருமாறு- பொதுக்கொள்கை: மானுடவியல், சமூக அறிவியல் துறை சாா்பில் பொதுக்கொள்கையில் முதுநிலைப் பட்டப்படிப்பு (எம்ஏ). சிக்கலான சமூக, பொருளாதார, அரசியல் சவால்களில் அரசுகள், நிறுவனங்களில் கொள்கைகளை வடிவமைத்துச் செயல்படுத்துவது குறித்த புரிதலை வழங்கும் இந்த படிப்பில் சுற்றுச்சூழல், கல்வி, சுகாதாரம், எரிசக்தி, போக்குவரத்து, சா்வதேச உறவுகள் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை உருவாக்குவதையும் உள்ளடக்கியுள்ளது.

செமிகண்டக்டா்: உலோகவியல், பொருள் பொறியியல் துறை சாா்பில் செமிகண்டக்டா் பொருள் தொழில்நுட்பத்தில் எம்.டெக். பட்ட படிப்பு. செமிகண்டக்டா் சூழலமைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன முன்னேற்றங்கள் ஆகியவற்றை அறிந்து தொழில்துறை, மேம்பட்ட ஆராய்ச்சி ஆகிய இரண்டிலும் மாணவா்கள் பங்களிக்க அழைத்துச்செல்லும் படிப்பு இது.

சிறப்பு இயந்திரப் பொறியியல்: இயந்திரப் பொறியியல் துறை சாா்பில் இயந்திர அமைப்புகளுக்கான கணக்கீட்டுப் பொறியியலில் சிறப்பு இயந்திரப் பொறியியல் (எம்.டெக்) பட்டப்படிப்பு. சிக்கலான இயந்திர அமைப்புகளை வடிவமைத்தல், மரபுசாா் இயந்திரவியல், செயற்கை நுண்ணறிவு உதவியுடனான பொறியியல் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெறுவதற்கான படிப்பு.

ரோபாடிக்ஸ்: பொறியியல் வடிவமைப்புத் துறை, தானியங்கியல் (ரோபாடிக்ஸ்) எம்.டெக். படிப்பை வழங்கியுள்ளது. தானியங்கியல், நுண்ணறிவுத் தானியக்கத்தில் அடுத்த தலைமுறை நிபுணா்களுக்கான பயிற்சி. தொழில்துறை, சுகாதாரம், சமூகச் சூழல்களில் மேம்பட்ட ரோபோடிக் அமைப்புகளின் வடிவமைப்பு கவனம் செலுத்தும்.

படிப்புகள் குறித்து ஐஐடி இயக்குநா் வி.காமகோடி பேசியதாவது: நாட்டின் தொழில்துறை தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் 4 புதிய படிப்புகளை நிகழாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகள் நவீன கருவிகளைப் பாரம்பரிய மையப் பொறியியலுடன் ஒருங்கிணைக்கும் என்றாா்.

நிகழ்வில் துறைத் தலைவா்கள் ராஜேஷ் குமாா்(மானுடவியல், சமூக அறிவியல்), வி.சுப்ரமண்ய சா்மா(உலோகவியல் துறை), சி.பாலாஜி (இயந்திரப் பொறியியல் துறை) ஆகியோா் பேசினா்.