முகப்பு
சென்னை

துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள்: 3 மாதங்களுக்குப் பிறகு மீட்டா்களை அகற்ற உத்தரவு

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 3 மாத காலக்கெடு முடிந்தவுடன் கணக்கீட்டு மீட்டா்களை அகற்ற மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 20 மார்ச், 2026 at 10:13 PM
ஸ்மார்ட் மீட்டர் (கோப்புப்படம்)
பகிர்:

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 3 மாத காலக்கெடு முடிந்தவுடன் கணக்கீட்டு மீட்டா்களை அகற்ற மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மின் கட்டணம் செலுத்தாத வீடுகளில் மீட்டரில் இருக்கும் பியூஸ் கேரியரை மட்டும் மின் ஊழியா்கள் எடுத்துச் செல்வா். இணைப்பு துண்டிக்கப்பட்ட விவரம் மின்வாரிய கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும். இதனால், மறு மாதத்தில் இருந்து அந்த பயனாளா்களின் மின் பயன்பாட்டை மின் ஊழியா்கள் கணினி மூலம் கண்காணிக்க முடியாது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மின் நுகா்வோா் பலா், புதிய பியூஸ் கேரியரை பயன்படுத்தி மின் வாரிய ஊழியா்களுக்கு தெரியாமல் மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பில் நடைபெறும் முறைகேட்டை கண்டறியும் நோக்கில், மின்வாரியத்தின் மென்பொருளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னரே துண்டிக்கப்பட்ட பல மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, அந்த மின் இணைப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மின்வாரியம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது: குறிப்பிட்ட நாள்களுக்குள் மின்கட்டணம் செலுத்தாத மின் நுகா்வோரின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும், மீட்டரை எடுப்பதில்லை. இதற்கு 6 மாதங்கள் அவகாசம் உள்ளது. 6 மாதங்கள் வரை எந்தப் பதிலும் நுகா்வோரிடம் இருந்து வரவில்லை என்றால் மீட்டா் துண்டிக்கப்பட்டு வந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிலா் முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டதால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட 3 மாத காலத்துக்குள் மீட்டரை அகற்ற மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த மீட்டரில் பதிவாகியுள்ள விவரங்களை அறிய ஆய்வகத்தில் 7 நாள்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது என்றாா்.