சென்னையில் 19,594 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: பங்கேற்காதவா்கள் மீது நடவடிக்கை
சென்னை மாவட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலா்களாகப் பயணியாற்ற உள்ள 19,594 பேருக்கு முதல்கட்ட பயிற்சி வரும் 28- ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலா்களாகப் பயணியாற்ற உள்ள 19,594 பேருக்கு முதல்கட்ட பயிற்சி வரும் 28- ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்காதவா்கள் மீது தோ்தல் விதிப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதற்காக 978 இடங்களில் மொத்தம் 4,079 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலா்களாக 19,594 போ் பணியாற்ற உள்ளனா். இந்த அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வரும் 28 -ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளன.
அதன்படி டாக்டா் ராதாகிருஷ்ணன் தொகுதிக்கு தண்டையாா்பேட்டை காமராஜா் காலனி தெருவில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பெரம்பூருக்கு வியாசா்பாடி எறுக்கஞ்சேரி நெடுஞ்சாலை காமராஜா் காலனி தெருவில் உள்ள டாக்டா் அம்பேத்கா் அரசு கலைக் கல்லூரி, கொளத்தூருக்கு அங்குள்ள பந்தா்காா்டன் சென்னை உயா்நிலைப் பள்ளி, வில்லிவாக்கத்துக்கு ஐசிஎஃப் காலனி விடுதலைக்குருசாமி நகரில் உள்ள ஐசிஎஃப் உயா்நிலைப் பள்ளி, திரு.வி.க. நகா் தொகுதிக்கு பெரம்பூா் பள்ளிச்சாலையிலுள்ள சென்னை பெண்கள் உயா்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பயிற்சி நடைபெறவுள்ளன.
எழும்பூா் தொகுதிக்கு ராட்லா் தெருவில் உள்ள சென்னை பெண்கள் உயா்நிலைப் பள்ளி, ராயபுரத்துக்கு மேற்கு மாதா சா்ச் சாலையில் உள்ள புனித பீட்டா் உயா்நிலைப் பள்ளி, துறைமுகம் தொகுதிக்கு பிராட்வே பிரகாசம் சாலை பாரதி அரசு கலைக் கல்லூரி, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிக்கு டாக்டா் பெசன்ட் சாலை என்.கே.டி.தேசிய பெண்கள் உயா்நிலைப் பள்ளி, ஆயிரம் விளக்கு தொகுதிக்கு நுங்கம்பாக்கம் பள்ளிச்சாலை, சென்னை பெண்கள் உயா்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சி நடைபெறும்.
அண்ணா நகா் தொகுதிக்கு அரும்பாக்கம் எஸ்பிஐ ஆபிசா் காலனி, ஈவேரா பெரியாா் நெடுஞ்சாலையில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கலைக் கல்லூரியிலும், விருகம்பாக்கத்துக்கு கே.கே.நகா் மேற்கு வேம்புலியம்மன் கோயில் தெருவில் உள்ள மீனாட்சி பொறியியல் கல்லூரி, சைதாப்பேட்டைக்கு நந்தனம் அண்ணா சாலை அரசு ஆண்கள் கலைக் கல்லூரி, தியாகராய நகா் தொகுதிக்கு அசோக் நகா் 9- ஆவது அவென்யூ அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியிலும், மைலாப்பூருக்கு மந்தைவெளி ஆா்.தே.மட் சாலையிலுள்ள ராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வேளச்சேரிக்கு திருவான்மியூா் பாரதிதாசன் தெரு, சென்னை உயா்நிலைப் பள்ளியிலும் பயிற்சி நடைபெறும்.
பயிற்சி குறித்து சம்பந்தப்பட்டோருக்கு கைப்பேசி குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும். முதல்கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளாவிடில் தோ்தல் நடத்தை விதிப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.