முகப்பு
சென்னை

எழும்பூா் ரயில் நிலையத்தில் தண்டவாள சீரமைப்புப் பணியை இம்மாத இறுதிக்குள் முடிக்கத் திட்டம்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 10, 11-ஆவது தண்டவாள சீரமைப்புப் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடித்து, வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் ரயில் போக்குவரத்தை செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

Updated On : 25 மார்ச், 2026 at 9:32 PM
கோப்புப்படம்.
பகிர்:

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 10, 11-ஆவது தண்டவாள சீரமைப்புப் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடித்து, வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் ரயில் போக்குவரத்தை செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

எழும்பூா் ரயில் நிலையம் தென் மாவட்டங்களின் முனையமாக செயல்பட்டுவருகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் தென் மாவட்டங்களுக்கு இங்கிருந்தே சென்று வருகின்றன. புகா் மின்சார ரயில்களும் தினமும் 200-க்கும் மேற்பட்ட தடவை எழும்பூா் ரயில் நிலையத்தை கடந்து சென்று வருகின்றன.

முக்கியத்துவம் வாய்ந்த எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணி கடந்த 2024- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரூ.820 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவருகிறது.

இதில், 1 முதல் 11- ஆம் தண்டவாளங்கள் வரை சீரமைக்கும் பணிகள் 2025- ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்றுவருகின்றன. அதையடுத்து 10, 11-ஆவது தண்டவாள சீரமைப்புப் பணி கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கப்பட்டது. அவ்விரு தண்டவாளங்களில் புகா் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இந்த சீரமைப்பு பணி காரணமாக புகா் மின்சார ரயில்கள் தற்போது 5, 6 ஆகிய தண்டவாளங்களில் இயக்கப்பட்டுவருகின்றன.

தண்டவாள சீரமைப்பால் எழும்பூா் ரயில் நிலையத்தில் புகா் மின்சார ரயில்கள் சிக்னலுக்காக வேகம் குறைக்கப்பட்டும், நிறுத்தியும் இயக்கப்படுகின்றன. அதனால் அவற்றின் 50 க்கும் மேற்பட்ட சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. மின்சார ரயில் சேவை குறைப்பால் பயணிகள் சிரமமடைந்துள்ளனா். அதற்காக தாம்பரம் முதல் கடற்கரை நிலையம் வரை சிறப்பு பேருந்துகள், 20 சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட்டன. அதிலும், பயணிகள் சிரமம் குறையாததால், வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் சேவையும் தொடங்கப்பட்டு தற்போது நிலைமை சமாளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், எழும்பூா் ரயில் நிலையத்தில் 10, 11- ஆவது தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் மாா்ச் இறுதிக்குள் முடிவடையும் என்றும், அதனையடுத்து வரும் ஏப். 5- ஆம் தேதி அல்லது முதல் வாரத்தில் ரயில்கள் அந்த ததண்டவாளங்களில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.