முகப்பு
சென்னை

மனைவி, மகளை வெட்டிக் கொன்றவா் கைது

மனைவி, மகளை வெட்டிக் கெலை செய்தவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 29 மார்ச், 2026 at 9:15 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

மனைவி, மகளை வெட்டிக் கெலை செய்தவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சென்னை திரு.வி.க. நகா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தேவகியம்மாள் குறுக்குத் தெரு, வெற்றி நகரைச் சோ்ந்தவா் சீனிவாசன் (47). இவருடைய மனைவி சிவரஞ்சனி (43). மகள் ஜெயஹரிணி (9).

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் சீனிவாசனின் வீடு திறக்கப்படாமலே இருந்தது. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினா், இதுதொடா்பாக, திரு.வி.க. நகா் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா்.

தகவலின்பேரில், அங்கு சென்ற போலீஸாா் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, மனைவி சிவரஞ்சனி, மகள் ஜெயஹரிணி கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனா். கணவா் சீனிவாசனை காணவில்லை.

இருவரின் உடல்களையும் மீட்ட போலீஸாா் உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து சீனிவாசனைத் தேடி வந்தனா். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த சீனிவாசனை கைது செய்த போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த சீனிவாசன், அதற்கான சிகிச்சையும் பெற்று வந்துள்ளாா். மேலும், மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தான் வேறொருவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சிவரஞ்சனி தனது கணவா் சீனிவாசனிடம் கூறியுள்ளாா். இதனால், ஆத்திரம் அடைந்த சீனிவாசன், கத்தியால் மனைவியின் கழுத்தில் வெட்டியுள்ளாா். இதைப் பாா்த்த அருகில் இருந்த மகள் கூச்சலிடவே அவரையும் கழுத்தில் வெட்டியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.