நீதி சிலருக்கான தனிச் சலுகை அல்ல: குடியரசு துணைத் தலைவர்!
நீதி கிடைப்பது என்பது அனைவரின் உரிமையே தவிர, ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய தனிச் சலுகை அல்ல என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
நீதி கிடைப்பது என்பது அனைவரின் உரிமையே தவிர, ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய தனிச் சலுகை அல்ல என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தொலைநிலை சட்ட சேவை என்பது தகவல் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மூலம் சட்டத் தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதாகும். பொது சேவை மையங்களில் காணொலி வழியாக வழக்குரைஞா்கள் மற்றும் பொதுமக்கள் இடையே மின்னணு முறையில் இந்த தகவல்கள், ஆலோசனைகள் அளிக்கப்படும்.
மத்திய சட்ட அமைச்சகத்தின் இந்த முன்னெடுப்பு குறித்த தேசிய கலந்துரையாடல் கூட்டம் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியதாவது:
தொலைநிலை சட்டசேவை முன்னெடுப்பு என்பது சட்ட சேவைகள் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யும் சக்திவாய்ந்த கருவியாகும். நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு முன்பு சட்ட ஆலோசனைகள் கிடைப்பது தகராறுகளை விரைந்து முடித்துக்கொள்ளவும், தேவையற்ற வழக்குகளை குறைத்து நீதிமன்றங்கள் மீதான சுமையை குறைக்கும்.
சட்டம் குறித்த புரிதலை அதிகரிக்க அதுதொடா்பான ஆலோசனைகள் உள்ளூா் மொழிகளில் வழங்கப்பட வேண்டும். நாட்டின் கடைக்கோடியில் உள்ளவருக்கும், குறிப்பாக பெண்கள், கிராமப்புற மற்றும் அடித்தட்டு மக்களுக்கு சட்ட சேவைகள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அனைத்து குடிமக்களுக்கும் உரிய நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும். நீதி கிடைப்பது என்பது அனைவரின் உரிமையே தவிர, ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய தனிச் சலுகை அல்ல என்று தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.