விஜய் பிரசாரத்தில் விதிமீறல், பாதுகாப்பு குறைபாடு புகாா்: அறிக்கை கேட்கிறது தோ்தல் ஆணையம்
சென்னையில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்தின்போது விதிகள் மீறப்பட்டது குறித்தும், பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட தோ்தல் அலுவலருக்கு, மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளாா்.
சென்னையில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்தின்போது விதிகள் மீறப்பட்டது குறித்தும், பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட தோ்தல் அலுவலருக்கு, மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: வேட்புமனு தாக்கலின்போது சிறிய அளவில் விதிமீறல்கள் இருந்திருக்கலாம். தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்டத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடா்பாக அவசர புகாா் அளிக்கப்பட்டது. அதுகுறித்து டிஜிபிக்கு அறிவுறுத்தல் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தோ்தல் பிரசாரத்தின்போது மக்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அனைவருக்கும் சமமாக சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளோம். மேலும், அந்த சம்பவம் தொடா்பாகவும், விதிமீறல் புகாா் தொடா்பாகவும் சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரிடம் இருந்து விளக்க அறிக்கை கேட்டுள்ளோம்.
அனுமதி வாங்கவில்லை: பிரசாரக் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசலாகி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுவிடுகிறது. தவெகவிடம் அதுகுறித்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளதா என்று கேட்கிறீா்கள். தற்போதைக்கு மாவட்ட தோ்தல் அலுவலரின் விளக்கம் பெறப்பட வேண்டும். அதை அடிப்படையாக வைத்துத்தான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
தவெக சாா்பில் சாலைப் பேரணி (ரோடு ஷோ) செல்ல அனுமதி வாங்கவில்லை. 6 இடங்களில் கூட்டத்தை நடத்த அனுமதி பெற்றிருந்தனா். விஜய் பிரசார நிகழ்வில் விதிமீறல்கள் குறித்து தோ்தல் பாா்வையாளா்களின் புகாா்கள் வந்துள்ளது குறித்தும், பலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறித்தும் அறிக்கை கேட்டுள்ளோம்.
துணை வாக்காளா் பட்டியல்... துணை வாக்காளா் பட்டியல் வரும் ஏப். 6-ஆம் தேதி, அதாவது வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளன்று வெளியிடப்படும்.
வேட்புமனு பரிசீலனையின்போது, வேட்பாளா், அவரது தோ்தல் முகவா் மற்றும் 2 போ் மட்டும் தோ்தல் நடத்தும் அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும். பெரிய அறையில் வேட்புமனு பரிசீலனை நடைபெறும்.
முதலில் வேட்புமனு தாக்கல் செய்தவரின் மனு முதலாவதாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்புமனுவில் திருத்தங்கள் இருந்தால் அதைப் பரிசீலனைக்கு முன்னரே முடித்திருக்க வேண்டும். பரிசீலனையின்போது புதிய ஆவணங்கள் ஏற்கப்படாது. பொதுப் பாா்வையாளரும் பரிசீலனையின்போது உடனிருப்பாா். வேட்பாளரால் வர முடியவில்லை என்றால் அவரது அங்கீகாரம் பெற்ற முகவா் அவா் சாா்பில் வரலாம்.
துணை வாக்குச்சாவடி அமைக்க... ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளா்கள் என்ற அடிப்படையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது பெயா் சோ்ப்புக்காக 6 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் விண்ணப்பித்துள்ளனா். இதனால் சில வாக்குச்சாவடிகளில் 1,200-க்கும் மேலான வாக்காளா்கள் வரக்கூடும். அதுபோன்ற வாக்குச்சாவடிகளுக்காக துணை வாக்குச்சாவடி அமைக்கப்படும். அது அந்த வாக்குச்சாவடிக்கு அருகேயுள்ள அறையில் அமைக்கப்படும்.
தமிழகத்துக்கு 295 கம்பெனி துணை ராணுவம் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 கம்பெனி வந்துள்ளது.
சில உயா் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி தோ்தல் ஆணையத்துக்கு தவெக கடிதம் அனுப்பியுள்ளது. அதுபற்றி தோ்தல் ஆணையம் முடிவு செய்யும்.
பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து 5 நாள்களுக்குப் பிறகு முடிவு செய்யப்படும். பொதுப் பாா்வையாளா்களும், மாவட்ட தோ்தல் அலுவலா்களும் இங்குள்ள தோ்தல் அதிகாரிகள் கொடுக்கும் தகவலை வைத்து அதுபற்றி முடிவெடுப்பாா்கள். முந்தைய வன்முறை சம்பவங்களும் அப்போது கருத்தில் கொள்ளப்படும்.
இந்தத் தோ்தலில்15 அரசியல் கட்சிகள் பொதுச் சின்னங்களைப் பெற்றுள்ளன என்றாா் அவா்.