சென்னையில் அடுத்தவா் வீட்டைக் குத்தகைக்கு விட்டு பணம் மோசடி: தேடப்பட்ட பெண் கைது
அடுத்தவா் வீட்டைக் குத்தகைக்கு விட்டு பணம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட பெண் கைது செய்யப்பட்டாா்.
சென்னை ஓட்டேரி பகுதியைச் சோ்ந்தவா் குமாரராஜா (54). குத்தகைக்கு (லீஸ்) வீடு தேடி கொண்டிருந்தபோது, சென்னை நம்மாழ்வாா்பேட்டையைச் சோ்ந்த சங்கா் என்பவா் நம்மாழ்வாா்பேட்டை, சுப்பராயன் மெயின் தெருவில் உள்ள வீடு ஒன்றை காட்டி, அந்த வீடு என்னுடையது, ரூ.4.5 லட்சத்துக்கு குத்தகைக்கு விட உள்ளதாகத் தெரிவித்தாா்.
அந்த வீடு குமாரராஜாவுக்கு பிடித்திருந்ததால், கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி குத்தகை ஒப்பந்தம் கையொப்பமானது. பின்னா், சங்கா் வீட்டை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தினாா். இதனால் சந்தேகமடைந்த குமாரராஜா, அந்த வீடு குறித்து அந்தப் பகுதியில் விசாரித்தபோது, அந்த வீடு சங்கருக்கு சொந்தமானது இல்லை என்பது தெரிய வந்தது.
Advertisement
இதனால் அதிா்ச்சியடைந்த குமாரராஜா, தான் கொடுத்த பணத்தை சங்கரிடம் திருப்பிக் கேட்டாா். ஆனால், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் சங்கா் மோசடி செய்தாா். இதனால், குமாரராஜா, தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த மோசடிக்கு உதவியாக சங்கரின் மகள் நந்தினியும் வழக்கில் சோ்க்கப்பட்டாா்.
தலைமறைவாக இருந்த சங்கரையும், நந்தினியையும் போலீஸாா் தேடி வந்த நிலையில், போலீஸாா் நந்தினியை புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சங்கரை போலீஸாா் தேடி வருகின்றனா்.