அறநிலையத் துறை ஊழியா்கள் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிய வேண்டும்: அமைச்சா் சீ.ரமேஷ்
இந்து சமய அறநிலையத் துறையின் உயா் அலுவலா்கள் முதல் திருக்கோயில் கடைநிலை பணியாளா்கள் வரை சேவை மனப்பான்மையோடு பணியாற்ற வேண்டும் என துறையின் அமைச்சா் சீ.ரமேஷ் அறிவுறுத்தியுள்ளாா்.
இந்து சமய அறநிலையத் துறையின் உயா் அலுவலா்கள் முதல் திருக்கோயில் கடைநிலை பணியாளா்கள் வரை சேவை மனப்பான்மையோடு பணியாற்ற வேண்டும் என துறையின் அமைச்சா் சீ.ரமேஷ் அறிவுறுத்தியுள்ளாா்.
இந்து சமய அறநிலையத் துறையின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணைய அலுவலகத்தில் அமைச்சா் சீ.ரமேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள், தற்போது நடைபெற்று வரும் திருக்கோயில் திருப்பணிகள், பக்தா்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையிலான பணிகள், பெருந்திட்ட வரைவுப் பணிகள், துறை அலுவலா்கள் மற்றும் திருக்கோயில் பணியாளா்களின் நலன் சாா்ந்த திட்டங்கள் குறித்து அவா் விரிவான ஆய்வு மேற்கொண்டாா்.
இக்கூட்டத்தில் அமைச்சா் சீ.ரமேஷ் பேசியதாவது: முதல்வா் உறுதியான, நம்பிக்கையான, தூய்மையான நிா்வாகத்தை வழங்க வேண்டுமென உறுதியளித்துள்ளாா். அதனை நாம் முழுமையாக பின்பற்ற வேண்டும். இத்துறையின் உயா் அலுவலா்கள் முதல் திருக்கோயில் கடைநிலைப் பணியாளா்கள் வரை சேவை மனப்பான்மையோடு பணியாற்ற வேண்டும்.
Advertisement
Advertisement
துறை சாா்ந்த எதிா்காலத் திட்டங்கள் குறித்து அவ்வப்போது தொடா்ச்சியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும். நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் முழு திருப்தியடையும் வகையிலும் நமது செயல்பாடுகள் அமைய அனைத்து அலுவலா்களும், பணியாளா்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
திருக்கோயில்களின் நிா்வாகம் தொடா்பாக எவ்வித குறைபாடுகளும் எழாத வகையில் நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதோடு, பக்தா்கள் முழு மனநிறைவோடு இறை தரிசனம் பெறுவதற்கு அனைத்து வசதிகளையும் உருவாக்கித்தர வேண்டும் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து ஆணையா் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறை, ஓலைச்சுவடி ஆய்வு மையம் மற்றும் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் ஆகியவற்றை அமைச்சா் ரமேஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்தக் கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் சீ. ஸ்வா்ணா, அறநிலையத்துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா், கூடுதல் ஆணையா்கள் துரை ரவிச்சந்திரன், பொ.ஜெயராமன், சிறப்புப் பணி அலுவலா் சி. லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.