காஞ்சிபுரம்

6 மாதங்களாகக் காத்திருக்கும் மாவட்ட சிறைச்சாலை திறப்பு விழா எப்போது?

கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், திறப்பு விழாவுக்கு காத்திருக்கிறது செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலை.

செங்கை பி. அமுதா

கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், திறப்பு விழாவுக்கு காத்திருக்கிறது செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலை.
 செங்கல்பட்டு கிளைச்சிறை வளாகத்தில் ஆங்கிலேயர் காலத்திலிருந்து நீதிமன்றங்கள் இயங்கி வந்தன. பின்னர் முதலாம், இரண்டாம் குற்றவியல் நீதிமன்றங்கள் மட்டும் இங்கு இயங்கி வந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தின் பின்பகுதியில் செங்கல்பட்டு கிளை சிறைச்சாலை இயங்கிவந்தது.
 சிறைச்சாலை அமைவிடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் கட்டப்பட்டதை அடுத்து, 1992-ஆம் ஆண்டில் குற்றவியல் நீதிமன்றங்கள் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு மாற்றப்பட்டன.
 இதையடுத்து, ஓராண்டு காலம் இந்தக் கட்டடம் பயன்பாடின்றிக் கிடந்தது. பின்னர், 1993-ஆம் ஆண்டில் இலங்கை அகதிகளை தங்க வைக்கும் வகையில் சிறப்பு இல்லமாக மாற்றப்பட்டு, மத்திய புலனாய்வுத் துறையினரால் (கியூ பிரிவு) பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளும், பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கு தங்க வைக்கப்பட்டனர். ஆண், பெண் என இருபாலரும் குடும்பம் குடும்பமாக தங்க வைக்கப்பட்டனர். அச்சமயம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி உள்ளிட்டோர் இச்சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
 இந்நிலையில், 1997-ஆம் ஆண்டு குடும்பத்துடன் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் வெவ்வேறு முகாம்களுக்கும், சிறைகளுக்கும் மாற்றப்பட்டனர். பின்னர், அகதிகள் சிறப்பு முகாமாக மாற்றப்பட்டு, வழக்குகளில் சம்பந்தப்பட்ட இலங்கை அகதிகளும், வெளிநாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் இங்கு தங்க வைக்கப்பட்டனர்.
 இவர்கள் தங்களது நாடுகளுக்கு அனுப்பும்படியும், திறந்தவெளி முகாமுக்கு அனுப்பக் கோரியும் பல போராட்டங்களை நடத்தி வந்தனர்.
 பின்னர், இங்கு தங்க வைக்கப்பட்ட இலங்கை அகதிகள் சிலர் திறந்தவெளி முகாமுக்கு மாற்றப்பட்டனர். மீதமிருந்தவர்கள் இந்த முகாமிலிருந்து 2 ஆண்டுகளுக்கு முன் செய்யாறு முகாமுக்கு ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டனர்.
 இதையடுத்து, சிறைச்சாலை வளாகம் வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், ரூ. 2.5 கோடி மதிப்பீட்டில் மாவட்ட சிறைச்சாலையாக இதை மாற்றுவதற்கு அரசு நிதி ஒதுக்கியதையடுத்து, காவல் துறை குடியிருப்புக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, இங்குள்ள கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டன. தவிர, சிறையின் மதில் சுவர்கள் உயர்த்தப்பட்டு, மதில் சுவருக்கு மேல் முள்கம்பி வலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறைச்சாலை 1.1 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
 கட்டுமானப் பணிகள் முடிவுற்று ஆறு மாதங்கள் ஆன நிலையில், திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் திறக்கப்படாமல் உள்ளதன் காரணம் தெரியவில்லை.
 இதுகுறித்து உதவிப் பொறியாளர் புருஷோத்தமனிடம் கேட்டபோது, "பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. அரசுக்கு தகவல் அளித்துள்ளோம். தலைமைச் செயலகத்தில் இருந்து தகவல் வந்தவுடன் திறப்பு விழா நடைபெறும்' என்றார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT