முகப்பு
காஞ்சிபுரம்

இட நெருக்கடியில் படப்பை ஆரம்ப சுகாதார நிலையம் நோயாளிகள் அவதி

சுகாதாரத் துறையின் அலட்சியப் போக்கால் கடந்த ஏழு ஆண்டுகளாக இட நெருக்கடியில் இயங்கி வருகிறது படப்பை ஆரம்ப சுகாதார நிலையம்

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:25 PM
பகிர்:

சுகாதாரத் துறையின் அலட்சியப் போக்கால் கடந்த ஏழு ஆண்டுகளாக இட நெருக்கடியில் இயங்கி வருகிறது படப்பை ஆரம்ப சுகாதார நிலையம். இதனால் இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
 காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட படப்பை, கரசங்கால், சாலமங்கலம், சிறுமாத்தூர், ஒரத்தூர், வைப்பூர், சேத்துப்பட்டு, உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்ல வேண்டும் என்றால், சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள எழிச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இதனால் இப்பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர்.
 இதையடுத்து 2009-ஆம் ஆண்டு படப்பை பகுதியிலேயே ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ரூ. 34.90 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுகாதார நிலையத்துக்குப் புதிய கட்டடம் கட்டும் வரையில் படப்பை பகுதியில் ஊரக வளர்ச்சி துறையினரால் பயன்படுத்தமுடியாது என கைவிடப்பட்ட பழைய தச்சுக் கூடத்தில் சுகாதார நிலையத்தை அவசர அவசரமாக திறந்தனர்.
 இதையடுத்து படப்பை ஊராட்சிக்கு உள்பட்ட ஆத்தனஞ்சேரி கிராமத்தில் உள்ள 40 சென்ட் அரசு மேய்கால் புறம்போக்கு இடத்தில் சுகாதார நிலையம் கட்ட கடந்த 2010-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அந்த இடம் அரசு மேய்கால் புறம்போக்கு இடம் என்பதால், மாற்று இடம் தந்ததால் தான் அனுமதி வழங்கப்படும் என வருவாய்த் துறையினர் எதிர்ப்பு தெரிவிக்கவே புதிய கட்டடம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது.
 இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டத்துக்கு உள்பட்ட கடம்பூர் கிராமத்தில் 50 சென்ட் நிலம் மாற்று இடமாக ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட 50 சென்ட் நிலத்தை மேய்கால் புறம்போக்கு இடமாக மாற்ற ரூ. 3,000 கட்ட வேண்டும் என்று கால்நடைத்துறை இயக்குநரால் சுகாதாரத் துறைக்கும், வருவாய்த் துறைக்கும் உத்தரவிடப்பட்டது.
 ஆனால், இவ்விரு துறைகளும் கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பணத்தைக் கால்நடைத் துறைக்கு செலுத்தவில்லை. இதனால் கட்டடம் கட்டுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணி கடந்த மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், தொடர்ந்து இட நெருக்கடியில் உள்ளது படப்பை ஆரம்ப சுகாதார நிலையம்.
 இதனால் இங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களும், மருத்துவமனைக்கு வரும் பெண் நோயாளிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
 எனவே கிடப்பில் போடப்பட்ட படப்பை ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க மாவட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என படப்பை, அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →