காஞ்சிபுரம்

அடிப்படை வசதிகள் இல்லாத மதுராந்தகம் பேருந்து நிலையம்

DIN

மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், ஆக்கிரமிப்புகளாலும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய நகராட்சியாக மதுராந்தகம் விளங்கி வருகிறது. மதுராந்தகத்துக்கு சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், புதுச்சேரி, சூனாம்பேடு, செய்யூர், கடலூர் கிராமம், சித்தாமூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
மதுராந்தகம் பேருந்து நிலையத்தின் உள்ளேயும், நுழைவாயில் பகுதியிலும் நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்பு காரணமாக பயணிகளும், பேருந்து ஓட்டுநர்களும் சிரமப்படுகின்றனர்.
பேருந்து நிலையத்தில் போதுமான இருக்கைகள் இல்லாததால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அமரவும், ஓய்வெடுக்கவும் முடியாத நிலை உள்ளது.
பேருந்து நிலைய கட்டடம் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை. இதனால் கடந்த சில நாள்களுக்கு முன்பு, பேருந்து நேரக் கண்காணிப்பாளர் பகுதிக்கு மிக அருகில் கட்டட மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனை நகராட்சி நிர்வாகம் இதுவரை சீரமைக்கவில்லை.
பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் கட்டணக் கழிப்பறை, நம்ம டாய்லெட் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். ஆனால் 'நம்ம டாய்லெட்' பகுதியில் போதிய பராமரிப்பும், தண்ணீரும் இல்லாததால், பெரும்பாலானோர் அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் நிலை உள்ளது. பேருந்து நிலைய பகுதிக்குள் ஷேர் ஆட்டோக்கள், வாடகை கார்கள், கீரை, காய்கறிகளை விற்கும் வண்டிகள் போன்றவற்றால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
தினமும் இரவு 9 மணிக்கு மேல் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற பகுதிகளுக்குச் செல்ல பேருந்துகள் இல்லாததால், புறவழிச் சாலையில் செல்லும் விரைவு பேருந்துகளையே நாட வேண்டிய நிலை உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு, மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: ஸ்மிருதி இரானி பின்னடைவு

நடிகர் சுரேஷ் கோபி முன்னிலை!

சசி தரூர் பின்னடைவு!

கே.கே. ஷைலஜா பின்னடைவு!

கர்நாடகம்: காங். பெரும் பின்னடைவு!

SCROLL FOR NEXT