மதுராந்தகம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் முடக்கம்: மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்
மதுராந்தகம் நகராட்சியில் குப்பைகளை உரிய முறையில் தரம் பிரிக்காததால், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் முடங்கி கிடக்கின்றன. இதனால் குப்பைக் கூளங்கள் மலை போல் குவிந்துள்ளன.
மதுராந்தகம் நகராட்சியில் குப்பைகளை உரிய முறையில் தரம் பிரிக்காததால், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் முடங்கி கிடக்கின்றன. இதனால் குப்பைக் கூளங்கள் மலை போல் குவிந்துள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய நகராட்சியாக மதுராந்தகம் திகழ்கிறது. இங்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், வியாபார நிறுவனங்கள் என 500-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கடைகள் உள்ளன.
இதனால், தினமும் சுமார் 15 டன் குப்பைகள் சேர்ந்து வருகின்றன. இவை மதுராந்தகம் அருகே உள்ள குருகுலம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 7 ஏக்கர் இடத்தில் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு, அதில் தினமும் லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன.
கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் மதுராந்தகம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்தது. இருப்பினும், மதுராந்தகம் நகராட்சி ஆணையர் மாரிசெல்வி தலைமையிலான நிர்வாகத்தினர் இதனை செயல்படுத்த எத்தகைய முயற்சியும் செய்யவில்லை.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் படி, மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டாக தரம் பிரிக்கப்படும். இவற்றில், மக்கும் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கவும், பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகளைக் கொண்டு, சாலை அமைக்கவும், இதர குப்பைகளை விற்பனை செய்யப்படவும் வேண்டும்.
இயற்கை உரம் தயாரித்து அதனை விற்பதன் மூலம் நகராட்சிக்கு வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை தொட்டிகள் காட்சிப் பொருளாகவே உள்ளன.
நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், மாம்பாக்கம் கிடங்கில் கொட்டப்படுகின்றன. இப்பகுதியில் கோயில் திருவிழாவின்போது, வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும். அப்போது சிதறும் வெடிகளாலும், விஷமிகள் சிலர் குப்பைகளை கொளுத்தி விடுவதாலும் தீ பிடித்து எரிகின்றன. இவற்றை அணைக்க மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் போன்ற இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு நீண்ட நேரம் ஆகின்றன. இதற்குள், குப்பைகள் எரிந்து விடுவதால் அதன் மூலம் வெளியேறும் புகை, அருகே உள்ள குருகுலம், மாம்பாக்கம், காட்டுக்காலனி போன்ற பகுதியில் பரவுகின்றன.
இதனால், சுற்றுச் சூழல் மாசடைந்து இப்பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். புகையின் விஷத்தன்மையால் மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம் போன்றவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
நகராட்சி பகுதிகளில் திரியும் நாய்களை கட்டுப்படுத்தும் வகையில், மாம்பாக்கம் குப்பைமேடு பகுதியில் கடந்த 2013-இல் ரூ. 3 லட்சம் மதிப்பில் நாய்கள்
பராமரிப்பு, இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அறுவைச் சிகிச்சை மையம் கட்டப்பட்டது. இது தற்போது செயல்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இக்கட்டடத்தை ஒட்டி, பிளாஸ்டிக்கை பொடியாக்கும் மையம் உள்ளது. இங்கு ரூ.4 லட்சம் செலவில் நிறுவப்பட்ட இயந்திரம் இயக்கப்படாமல் உள்ளது. மேலும், இந்த இயந்திரத்தின் முக்கிய பாகங்களை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்று விட்டனர். இப்பகுதி ஆள் நாடமாட்டம் இல்லாத இடமாக இருப்பதால் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்களும் நடைபெறுகின்றன.
எனவே, இவ்வளவு குறைபாடுகள் உள்ள மதுராந்தகம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை முறையாகச் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் பேருந்து நிலையத்தில்
காட்சிப் பொருளாக உள்ள குப்பை தொட்டிகள்.