காஞ்சிபுரம் விதைப் பரிசோதனை ஆய்வகத்தில் இயக்குநர் திடீர் ஆய்வு
காஞ்சிபுரம் விதைப்பரிசோதனை ஆய்வகத்தில் வேளாண் விதைச்சான்று, அங்ககச் சான்று இயக்குநர் சி. மூர்த்தி புதன்கிழமை திடீர் ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் விதைப்பரிசோதனை ஆய்வகத்தில் வேளாண் விதைச்சான்று, அங்ககச் சான்று இயக்குநர் சி. மூர்த்தி புதன்கிழமை திடீர் ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரத்தில் விதைப்பரிசோதனை நிலையம் பஞ்சுப்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. இதில், விவசாயிகள், வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட விதை விற்பனை மையங்களிலிருந்து பெறப்படும் விதை மாதிரிகள் அனைத்தும் தர ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதுபோல், விதை விற்பனையாளர்கள் தரமான விதைகளை விற்பது குறித்த ஆய்வுக்கும் விதைப் பரிசோதனை மையத்தில் தரச்சான்றிதழ் அளிக்கப்படுகிறது. அதன்மூலம் பெறப்பட்ட விதைகளில், புறத்தூய்மை, முளைப்புத்திறன், பிற ரக கலவன் (ஒரு விதையில் இரு ரகங்கள்), விதையின் ஈரப்பதம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு தரமான விதையை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் விதைப் பரிசோதனை நிலையத்தில் உள்ள ஆய்வகத்தில் அவர் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விதைப் பரிசோதனை குறித்த விவரங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, ஆய்வுக்கு அனுப்பப்பட்ட விதையின் முளைப்புத்திறன், விதை வளர்க்கப்படும் அறையின் தட்பவெப்பநிலை, அதன் ஈரப்பதம் உள்ளிட்டவை சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, உறுதி செய்தார்.
மேலும், காஞ்சிபுரம் விதைப்பரிசோதனை நிலையத்தில் பராமரிக்கப்படும் அனைத்துப் பதிவேடுகளும் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, காஞ்சிபுரம் விதைப் பரிசோதனை அலுவலர் எம்.ஜோசப் ஹெக்டர், வேளாண் அலுவலர்கள் மொ.மாயன், கோ.வினிதா ஆகியோர் உடனிருந்தனர்.