மலிவான கட்டணத்தில் கழிவுநீர் அகற்றும் பேரூராட்சி
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பேரூராட்சியில் வீடுகளில் மலிவான தொகையில் அரசின்
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பேரூராட்சியில் வீடுகளில் மலிவான தொகையில் அரசின் சிறப்புத் திட்டமாக கழிவுநீர் மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதை அடுத்து அரசுத் துறை அதிகாரிகள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு பாராட்டு தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய பேரூராட்சி பகுதியாக திகழ்வது கருங்குழி பேரூராட்சி. இங்கு 15 வார்டுகள் உள்ளன. சுமார் 1,500 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால் அரசின் சார்பில் செயல் அலுவலர் (பொ) மா.கேசவன் தலைமையில் பேரூராட்சி நிர்வாகம் செயல்படுகிறது.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது, திறந்தவெளியில் மலம் கழிப்பது ஆகியவற்றுக்கு தற்சமயம் அரசால் தடை விதித்திருந்தாலும், ஒரு சில இடங்களில் மறைமுகமாக கழிவுகள் இவ்வாறு அகற்றப்பட்டு வருகிறது. இத்தகைய கழிவுகளை அரசு முன்னின்று அகற்றினால் கழிவுநீரில் உருவான நச்சுக் காற்றால் ஏற்படும் மனித உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்.
அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக கருங்குழி பேரூராட்சியில் அரசின் சிறப்புத் திட்டமாக கழிவு மேலாண்மைப் பணி கடந்த 2016 முதல் செயல்படுத்தப்படுகிறது. இப்பணிக்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகளில் கழிவறையுடன் தொட்டி கட்டி, அதில் கழிவுநீர் நிறைந்தவுடன் டேங்கர் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.
இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் கழிவுநீர் எடுக்கும் பணி முறைப்படுத்தப்பட்டுள்ளது. கழிவுநீர்த் தொட்டியை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை டேங்கர் லாரி மூலம் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது.
ஏற்கெனவே வீடுகளில் எந்த மாதம் கழிவுநீர் எடுக்கப்பட்டது என்ற விவரம் பேரூராட்சி அலுவலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன்தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் உரிய நாளில் அலுவலகத்தின் மூலம் கழிவுநீர் எடுப்பதற்கான நினைவூட்டுக் கடிதம் மூலமாகவோ, துப்புரவுப் பணியாளர் மூலமோ தகவல்
அனுப்பப்படுகிறது.
கழிவுநீரை டேங்கர் லாரி மூலம் அகற்ற சீரான கட்டணத்தை பேரூராட்சி நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. தனிநபர் கழிவுநீர் அகற்றும் லாரிகள் வாங்கும் கட்டணத்தை விட மிகக் குறைவான கட்டணமே வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் கழிவுநீர் அகற்றும் லாரிகளுக்கு முறையான உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
பேரூராட்சியைச் சேர்ந்த மக்கள் கழிவு நீரை டேங்கர் லாரி மூலம் எடுத்துச் செல்ல அந்த லாரிக்கான கட்டணத்தை முன்கூட்டியே பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்தி அந்த ரசீதை அவசியம் பெற்றுக் கொள்ளவேண்டும். இதன் மூலம் டேங்கர் லாரியை தாமதமின்றி உடனடியாக தங்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்க ஏதுவாக அமையும். டேங்கர் லாரி மூலம் எடுக்கப்பட்ட கழிவு நீர் பேரூராட்சி சார்பில் கட்டப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அங்கு முதல்நிலை வடிகட்டியான கழிவுநீர் உலர்த்துதல் படுக்கையில் கழிவுநீர் கொட்டப்படுகிறது. இதில் 6.00 - 8.00 மீ அளவு கொண்ட 20 கழிவு நீர் உலர்த்துதல் படுக்கைகளும், 23,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும் உள்ளன. முதல்நிலையான கழிவுநீர் உலர்த்துதல் படுக்கையில் கொட்டப்படும் கழிவு நீர் 2ஆம் நிலை வடிகட்டியான கிடைமட்ட கழிவு நீர் வடிகட்டிக்கு செல்லும். இந்நீரை கிடைமட்ட கழிவு நீர் வடிகட்டியில் உள்ள நாணல் மற்றும் கல்வாழை செடிகள் 5 சதவிகித கழிவுகளை உறிஞ்சி கொண்டு மீதி கழிவு நீரை 3-ஆவது நிலையான முதிர்ச்சி குளத்துக்கு அனுப்புகிறது.
முதிர்ச்சி குளத்தில் இருந்து 4-ஆவது நிலை வடிகட்டியான கீழ்நிலைத் தொட்டியை வந்தடைகிறது. அங்கிருந்து மரம் மற்றும் செடிகளுக்கு அந்நீர் பயன்படுத்தப்படுகிறது. கழிவுநீர் உலர்த்தும் படுக்கையில் 20 நாள்களுக்குப் பிறகு கழிவுகள் காய்ந்த நிலையில் சேகரிக்கப்பட்டு இருப்பு அறையில் வைத்து இயற்கை உரமாக பயன்படுத்தப்படுகிறது.
இதனால் நிலத்தடிநீர் மாசுபடாமல் இருக்கவும், அந்தக் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து பின்னர் விவசாயப் பயிர்களுக்கு பயன்படும்வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் முழுக்க முழுக்க அரசின் நேரடி செயல்பாட்டிலும், மானியத்திலும் செயல்படுகிறது.
இதற்காக ரூ.4.93 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், தொழிற்சாலை போன்ற பகுதிகளில் இருந்து எடுக்கும்போது ரசாயனக் கலவை கலந்துவிடும் என்ற அச்சத்தில் வீட்டுப் பகுதிகளில் இருந்து மட்டுமே கழிவுநீர் எடுத்துச் செல்லப்படுகிறது.
தமிழகத்திலேயே முதல் பேரூராட்சியாக கருங்குழி பேரூராட்சி நிர்வாகம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதை பாராட்டி தமிழக பேரூராட்சிகளின் இயக்குநர் பழனிசாமி கடந்த ஜூலை 7ஆம் தேதி ஐ.எஸ்.ஓ தரச்சான்றை, இப்பேரூராட்சியின் செயல் அலுவலர் கேசவனிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.