அடிக்கடி விபத்தை சந்திக்கும் ஸ்ரீபெரும்புதூர் -தாம்பரம் சாலை: எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்படுமா?
அடிக்கடி விபத்துகள் நிகழும் ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலையில் விபத்து எச்சரிக்கை பலகைகள் அமைக்கவும், குடியிருப்பு மற்றும் பள்ளிகள் இயங்கும் பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கவும் வேண்டும் என
அடிக்கடி விபத்துகள் நிகழும் ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலையில் விபத்து எச்சரிக்கை பலகைகள் அமைக்கவும், குடியிருப்பு மற்றும் பள்ளிகள் இயங்கும் பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கவும் வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஒருவழிச்சாலையாக இருந்த ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலை கடந்த 2008-ஆம் ஆண்டு, ரூ.7.68 கோடி மதிப்பில் ஒரு வழிச்சாலையில் இருந்து இரு வழிச்சாலையாக அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டது.
இதையடுத்து இச்சாலை மீண்டும் கடந்த 2011-ஆம் ஆண்டு ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது. சாலை புதுப்பிக்கப்பட்டவுடன் இச்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
இந்த நிலையில், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம் செய்யப்பட்டு பிள்ளைப்பாக்கம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கியதால், இச்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. வாகன போக்குவரத்து அதிகரித்த அதே வேளையில், இச்சாலையில் நடைபெறும் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்தச் சாலையில் மணிமங்கலம் பகுதியில் உள்ள நான்கு அபாயகரமான வளைவு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக விபத்து எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்படாததால், இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் இப்பகுதிகளில் விபத்துகள் நிகழ்கின்றன.
இது தவிர இங்கு இயங்கி வரும் கல்குவாரிகளுக்கு வரும் லாரிகள், தொழிற்சாலை பேருந்துகளை அதன் ஓட்டுனர்கள் அதிவேகத்தில் இயக்குவதால், வாகன விபத்துகளில் சிக்கும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே, ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலையில் உள்ள வளைவு பகுதிகளில் விபத்து எச்சரிக்கை பலகைகள் வைக்கவும், குடியிருப்பு மற்றும் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.