காஞ்சிபுரம்

நள்ளிரவில் முறிந்து விழுந்த பழமையான மரம்: உரிய நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்ப்பு

DIN


நள்ளிரவில் முறிந்து விழுந்த மரத்தை உரிய நேரத்தில் அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதி உள்ளது. இக்குடியிருப்புகளில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தக் குடியிருப்புப் பகுதிகளில் 40-50 ஆண்டுகள் பழமையான மரங்கள் அதிக அளவில் உள்ளன. 
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் பழமை யான மரம் ஒன்று குடியிருப்பு தெருவோரம் பட்டுப்போனதால், திடீரென வேரோடு முறிந்து விழுந்தது. 
இதனால், பலத்த சப்தத்துடன் முறிந்த மரக்கிளைகள் அப்பகுதி மின்கம்பத்தின் மீது விழவே, மின்கம்பிகள் ஆபத்தான முறையில் அறுந்து விழுந்தன. 
இதனை சற்றும் எதிர்பாராத அப்பகுதியினர், திடுக்கிட்டு வெளியே வந்த பார்த்தனர். ஆபத்தான முறையில் இருந்த மின் கம்பிகள் குறித்து மின்வாரியத்துக்கு தகவல் அளித்தனர். 
இது பற்றிய தகவலின் பேரில் அப்பகுதிக்கு வந்த மின் வாரிய ஊழியர்கள் மின்சார இணைப்பை நிறுத்திவிட்டுச் சென்றனர். 
இதைத் தொடர்ந்து, ஆபத்தான முறையில் மின்கம்பிகளுடன் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால், குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் அவதிக்குள்ளானதோடு, பதற்றமும் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதிக்கு வந்த சமூக ஆர்வலர்கள் விரைந்து செயல்பட்டு, மின்வாரியம், தீயணைப்புத்துறை மற்றும் பெருநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். 
அதன்பேரில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் முரளி, பெருநகராட்சி பொறியாளர் மகேந்திரன், மின்வாரிய செயற்பொறியாளர் சரவணப்பெருமாள் ஆகியோர் உரிய அலுவலர்கள், ஊழியர்களை சம்பவ இடத்துக்கு விரைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி, மரத்தையும், மின்கம்பியையும் அப்புறப்படுத்த ஊழியர்கள் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மின்கம்பிகளை 
அகற்றினர். நகராட்சி ஊழியர்கள் முறிந்து விழுந்த மரத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் 2 மணி நேரத்துக்குள் அப்புறப்படுத்தினர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறியது: 
நள்ளிரவு நேரத்தில் திடீரென முறிந்த மரக்கிளைகள், மின்கம்பத்தின் மீது விழுந்தன. இதனால், 5 மின்கம்பங்கள் சாய்ந்தன. 
அதோடு, மின்மாற்றியும் எரிந்து இப்பகுதியே இருளில் மூழ்கியது. இதையடுத்து, சமூக ஆர்வலர்களின் முயற்சியால், மரக்கிளைகள், மின்கம்பிகள் சில மணிநேரங்களில் அப்புறப்படுத்தப்பட்டன. 
இதே சம்பவம் பகல் நேரத்தில் நடந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். 
இதனிடையே, வருவாய்த் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் செல்லிடப்பேசி அழைப்பினை ஏற்காமல் உதாசீனப்படுத்திவிட்டனர். 
மாவட்ட நிர்வாகம் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அனைத்துத் துறையினரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆபத்து நேரங்களில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடியும். எனவே, மாவட்ட நிர்வாகமானது அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்பட அறிவுறுத்த வேண்டும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர். 
மேலும், விரைந்து செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT