காஞ்சிபுரம்

மருத்துவர்களைத் தாக்க முயன்ற 3 பேர் கைது

DIN


செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைத் தாக்க முயன்ற 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
 செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை தனது மனைவியுடன் வந்த நபர் மதுபோதையில் மருத்துவர்களிடம் தகாத வார்த்தைகளைப் பேசியுள்ளார். 
இதைத் தட்டிக்கேட்ட காவலரை சரமாரியாகத் தாக்கி விட்டு அந்த நபர் வெளியேறினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த நபர் உள்பட 3 பேர் மருத்துவமனைக்குள் நுழைந்தனர். தங்களுக்கு முதலில் சிகிச்சை அளிக்கும் படி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மோசமாகத் திட்டியதோடு, அவர்களைத் தாக்கவும் முற்பட்டுள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் செங்கல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வருவதற்குள் 3 பேரும் தப்பியோடினர். 
இதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   இவர்களது போராட்டம் 2-ஆம் நாளாக புதன்கிழமையும் தொடர்ந்தது.
மருத்துவமனைக்கு முன்பு பந்தல் அமைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்குத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். மருத்துவர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கவேண்டும். போதுமான காவலர்களை பாதுகாப்புப் பணியில் அமர்த்திட வேண்டும். தகராறில் ஈடுபட்ட நபரை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
இதில் மருத்துவ சங்க நிர்வாகிகள் மோகன்குமார், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, மருத்துவர்களைத் தாக்க முயன்ற 3 பேரையும் தேடி வந்த போலீஸார், ஆந்திர மாநிலத்தில் எல்எல்பி படித்துவரும் செங்கல்பட்டைச் சேர்ந்த வினோத்குமார் (27), டாஸ்மாக் மதுக்கூட ஊழியர்களான ராமநாதபுரத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி (27), எழில் (45) ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT