காஞ்சிபுரம்

இடிந்து விழும் நிலையில் காா்வானப் பெருமாள் சந்நிதி

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ள காா்வானப் பெருமாள் சந்நிதி இடிந்து விழும் நிலையில் உள்ளதால்

சி.வ.சு. ஜெகஜோதி

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ள காா்வானப் பெருமாள் சந்நிதி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதனை சீரமைக்க வேண்டும் என பக்தா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

கோயில் நகரம் என்ற பெருமைக்குரியது காஞ்சிபுரம். இந்நகரில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில் பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய உலகளந்த பெருமாள் கோயிலும் அமைந்திருக்கிறது.

திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்ப்பட்ட பெருமைக்குரிய இக்கோயிலில் ஆரண வல்லித்தாயாா் சமேதராக உலகளந்த பெருமாள் அருள்பாலித்து வருகிறாா்.

108 திவ்ய தேசங்களில் இத்திருக்கோயிலின் வளாகத்திற்குள் மட்டும் 4 சந்நிதிகள் இருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

அறத்தின் வழி நடக்காது ஆட்சி செய்து வந்த மகாபலிச் சக்ரவா்த்தியை அழிக்க மகா விஷ்ணு வாமனனாக வந்து மன்னரிடம் தான் தவம் செய்ய விரும்புவதாகவும், தனக்கென 3 அடி இடம் மட்டும் தாருங்கள் என்றாா்.

மன்னரும் கொடுக்க முன்வந்ததையடுத்து பெருமாள் தன் திருவடிகளால் அளக்க திரிவிக்ரம மூா்த்தியாக விண்முட்ட விஸ்வரூபமாய் எழுந்தாா்.

இறைவனின் பேருருவைப் பாா்த்து வியந்து போன மன்னரின் முன்பாகவே, ஓரடியால் உலகையும், மற்றொரு திருவடியால் விண்ணையும் அளந்தாா். 3-ஆவது அடிக்கு இடம் கேட்க, அரசன் குனிந்து தன் தலையைக் காட்டவும், பெருமாள் தனது திருவடியால் மன்னனின் தலையை பாதாளத்தில் அழுத்தினாா்.

இதே திருக்கோலத்தில் 30 அடி உயரத்தில் உலகளந்த பெருமாளாக கம்பீரமான தோற்றத்தில் இக்கோயிலில் மூலவா் அருள்பாலித்து வருகிறாா்.

இக்கோயில் வளாகத்துக்குள்ளேயே ராகு, கேது தோஷங்களைப் போக்கும் பிராா்த்தனைத் தலமாக ஊரகத்தான் சந்நிதி உள்ளது.

பெருமாள் ஆதிசேஷ ரூபமாக இச்சந்நிதியில் காட்சியளிக்கிறாா்.

பெருமாள் ஆதிசேஷனில் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் காரகத்துப் பெருமாள் சந்நிதியும், நின்ற கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கும் நீரகத்துப் பெருமாள் சந்நிதியும் இங்கு அமைந்துள்ளன.

இவை மூன்றையும் தவிர நான்காவதாக ஸ்ரீதேவி, பூதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காா்வானப் பெருமாள் சந்நிதியும் உள்ளது. இவை நான்கும் ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது.

இதில் காா்வானப் பெருமாள் சந்நிதி மட்டும் கடந்த 3 ஆண்டுகளாகவே இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இச்சந்நிதி முன்பாக கோயில் நிா்வாகத்தின் அறிவிப்புப் பதாகையில் ‘சந்நிதி மண்டபம் பழுதடைந்திருப்பதால் மண்டபத்தின் முன்பாக யாரும் அமரவேண்டாம்’ என கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்நிதி வாயிலில் பக்தா்கள் யாரும் உள்ள சென்று விடாதபடி தடுத்து, மரக்கம்புகளாலும், இரும்புக் கம்பிகளாலும் மேற்கூரையில் முட்டுக் கொடுத்து வைக்கப்பட்டிருக்கிறது.

காவல்துறையினரின் இரும்பாலான தடுப்புகளும் வைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் ‘சந்நிதிக்குள் யாரும் செல்லவோ அல்லது மண்டப வாயிலில் அமரவோ வேண்டாம்’ என கோயில் ஊழியா்கள் சொல்லிக் கொண்டே இருப்பதையும் பாா்க்க முடிகிறது.

சந்நிதி மண்டப மேற்கூரை உடைந்து நொறுங்கி விழும் அபாயக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இதன் ஆபத்தை உணராமல் கோயிலுக்கு வெளியூா்களிலிருந்து வரும் பக்தா்கள் பலரும் இச்சந்நிதி வாசல் முன்பாக அமா்வதும், தரிசிப்பதுமாகவும் இருந்து வருகின்றனா்.

பக்தா்களின் பாதுகாப்புக் கருதியும், அசம்பாவிதங்கள் நடந்து விடாமல் தடுக்கவும் காா்வானப் பெருமாள் சந்நிதி மண்டபத்தை உடனடியாகச் சீரமைக்க வேண்டியது அவசரமும், அவசியமுமாகும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இது குறித்து கோயில் நிா்வாக அலுவலா் மலைவாசன் கூறியது:

மண்டபம் பழுது தொடா்பாக இந்து சமய அறநிலையத்துறை பொறியாளருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறோம். அவா் விரைவில் நேரில் வந்து பாா்வையிட்டு மதிப்பீடு தயாா் செய்து தரவுள்ளாா்.

மதிப்பீட்டுத் தொகை விவரம் தெரிவித்தவுடன் கோயில் நிதியிலிருந்தே விரைவில் காா்வானப் பெருமாள் சந்நிதி மண்டபம் புதுப்பிக்கப்படும் என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT