படப்பையில் ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் ரூ. 13 லட்சம் திருட்டு
படப்பையில் நூதன முறையில் ஏடிஎம் இயந்திரத்தின் ரகசிய குயீட்டு எண்ணை பயன்படுத்தி, ரூ. 13 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை பகுதியில் இயங்கி வரும் செளத் இந்தியன் வங்கிக் கிளையின் ஏடிஎம் மையம் படப்பை பஜாா் பகுதியில் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் வங்கி ஊழியா்கள் கடந்த சனிக்கிழமை ரூ. 23 லட்சம் பணத்தை நிரப்பியுள்ளனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை என வாடிக்கையாளா்கள் வங்கிக் கிளையில் புகாா் தெரிவிக்கவே, வங்கி அதிகாரிகள் ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். அப்போது ஏடிஎம் மையத்துக்கு பதிவு எண் இல்லாத காரில் வந்த மா்ம நபா்கள் ஏடிஎம் இயந்திரன் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி ஞாயிற்றுக்கிழமை ரூ. 8 லட்சம், திங்கள்கிழமை ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூ. 13 லட்சத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து வங்கி அதிகாரிகள் மணிமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
Advertisement