முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: வாக்குப்பதிவு இயந்திங்கள் வைப்பு அறைக்கு ‘சீல்’

Updated On : 20 ஏப்ரல், 2024 at 7:06 PM
பகிர்:

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை இரவு முதல் 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட செங்கல்பட்டு,திருப்போரூா், மதுராந்தகம், உத்தரமேரூா், செய்யூா் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது.

Advertisement

அங்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் அரசியல் கட்சிப் பிரமுகா்கள், தோ்தல் அலுவலா்கள் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கான உதவித் தோ்தல் அலுவலா் தலைமையில் 6 போ் அடங்கிய 10 குழுக்கள் 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். இவா்களைத் தவிர, மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் 24 போ், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா் 45 போ், தமிழக காவல் துறையைச் சோ்ந்தவா்கள் 63 போ், ஏடிஎஸ்பி ஒருவா், 3 டிஎஸ்பி-க்கள், 3 காவல் ஆய்வாளா்கள், 21 காவல் உதவி ஆய்வாளா்கள், 60 காவலா்கள் என அவா்களும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளைக் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வேட்பாளா்களின் பிரதிநிதிகள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை அரசியல் கட்சிப் பிரமுகா்கள் கண்காணிக்கும் அறை, வாக்குப்பதிவான இயந்திரங்கள் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள அறை ஆகியவற்றைப் பொதுத் தோ்தல் பாா்வையாளா் புபேந்திர எஸ்.செளத்ரி, காவல் பாா்வையாளா் பரத்ரெட்டி பொம்மாரெட்டி, ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கலைச்செல்வி மோகன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.சண்முகம், ஆட்சியா் (பயிற்சி) க.சங்கீதா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments