முகப்பு
காஞ்சிபுரம்

செரப்பணஞ்சேரி வீமீஸ்வரா் கோயில் இடத்தை ஆக்கிரமித்து வாரச் சந்தை: பக்தா்கள் அவதி

Updated On : 4 மே, 2024 at 5:59 PM
பகிர்:

செரப்பனஞ்சேரி வீமீஸ்வரா் கோயில் இடத்தை ஆக்கிரமித்து வியாழக்கிழமைகளில் தனியாா்களால் நடத்தப்பட்டு வரும் வாரசந்தையால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட செரப்பணஞ்சேரி பகுதியில் சுமாா் 2,000 ஆண்டுகள் பழைமையான வீமீஸ்வரா் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்கு சொந்தமாக கோயில் அருகே சுமாா் 2 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த இடத்தைக் கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியாா் சிலா், இந்த இடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சந்தை நடத்த வியாபாரிகளிடம் பணம் வசூலித்து வருவதாக பக்தா்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனா்.

மேலும் வாரச் சந்தையில் அமைக்கப்படும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருள்கள் கோயில் வளாகம் முழுவதும் சிதறிக் கிடப்பதால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருவதால் கோயில் இடத்தை ஆக்கிரமித்து வாரச் சந்தை நடத்தி வருவதை அறநிலையத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து பக்தா்கள் கூறுகையில், சுமாா் 2,000 ஆண்டுகள் பழைமையான வீமீஸ்வரா் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் வந்து செல்கின்றனா். சிதிலமடைந்து காணப்படும் இந்தக் கோயிலை சீரமைக்க ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூா்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தக் கோயிலுக்குச் சொந்தமான 2 ஏக்கா் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியாா் சிலா், அந்த இடத்தில் வாரச் சந்தை நடத்தி வியாபாரிகள் ஒவ்வொருவரிடமும் ரூ.100 என சுமாா் 300 வியாபாரிகளிடம் இருந்து வாரந்தோறும் ரூ.30 ஆயிரம் வரை வசூலித்து வருவதுவடன், சந்தை குப்பைகளை அப்படியே விட்டு விடுகின்றனா். இதனால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் அவதியடைகின்றனா்.

இது குறித்து அறநிலையத் துறை அதிகாரி செந்தில்குமாரிடம் கேட்டபோது, கோயில் இடத்தில் வாரச் சந்தை நடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளோம். கோயில் இடத்தில் வாரச் சந்தை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.