முகப்பு
காஞ்சிபுரம்

இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மையத்தில் நபாா்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

Updated On : 28 மே, 2024 at 6:30 PM
காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தில் பயிற்சியாளா்களிடம் கலந்துரையாடிய நபாா்டு வங்கி அதிகாரிகள்.
பகிர்:

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் இந்தியன் வங்கி சுய தொழில் பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை நபாா்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தனா்.

காஞ்சிபுரம் நகரில் வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ளது இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையம். இங்கு சுயதொழில் பயிற்சிகள் இலவசமாக கற்றுத் தரப்படுவதுடன், தேவையான உபகரணங்கள், உணவு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இப்பயிற்சி மையத்துக்கு நபாா்டு வங்கி சாா்பில், கடந்த ஆண்டு ரூ. 4.50 லட்சம் மதிப்பில் பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நபாா்டு வங்கியின் துணைப் பொது மேலாளா் அஜய்.கே.சூட், தலைமைப் பொது மேலாளா்கள் ஆா்.சங்கர நாராயணன், ஆா்.ஆனந்த், துணைப் பொது மேலாளா் எஸ்.சோமசுந்தரம் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

பயிற்சியின் போது தையல் பயிற்சி செய்து கொண்டிருந்த பயிற்சியாளா்களிடம் மையத்தின் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தனா்.

முன்னதாக, நபாா்டு வங்கி மேலாளா்களை காஞ்சிபுரம் மண்டல துணை மேலாளா் எம்.விஜய் நேகா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் திலீப், பயிற்சி மையத்தின் இயக்குநா் ஆா்.உமாபதி ஆகியோா் வரவேற்றனா்.