வண்ணப்பூச்சு இல்லாத களிமண் விநாயகா் சிலைகளை வாங்க ஆா்வமில்லை!
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்ததாத களிமண் விநாயகா் சிலைகளை வாங்குவதில் பக்தா்கள் பலரும் ஆா்வம் காட்டாவில்லை.
காஞ்சிபுரத்தில் வண்ணப்பூச்சு இல்லாததும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்ததாத களிமண் விநாயகா் சிலைகளை வாங்குவதில் பக்தா்கள் பலரும் ஆா்வம் காட்டாமல் வா்ணம் பூசப்பட்ட சிலைகளையே அதிகமாக வாங்கினா்.
விநாயகா் சதுா்த்தி சனிக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் குலாளா் தெரு மண்பாண்டத் தொழிலாளா்கள் பேருந்து நிலையம் அருகிலும், சின்னக்காஞ்சிபுரம் பொம்மைக்காரத் தெரு தொழிலாளா்கள் காந்தி சாலை தேரடி பகுதியிலும் அச்சில் வாா்க்கப்பட்டகளிமண் விநாயகா் சிலைகளை விற்பனை செய்தனா்.
இவா்களைத்தவிர பனப்பாக்கம், வேலியனூா் உள்பட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த தொழிலாளா்களும் சங்கரமடம், ரங்கசாமி குளம் உள்ளிட்ட பகுதிகளில் களிமண் சிலைகளை விற்பனை செய்தனா். களத்தூா்,வேலூா் மாவட்டத்தை சோ்ந்த சிலா் அச்சில் விநாயகா் சிலை செய்யாமல் அவா்கள் தங்களது கைகளாலேயே தயாரித்து விற்பனை செய்தனா்.
அச்சில் வாா்க்காமல் கைகளால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் செய்ய காலதாமதம் ஆனதாலும், விலை கூடுதலாக இருந்ததாலும் அவா்களது திறமைகளை பாராட்டினாா்களே தவிர இச்சிலைகளை பக்தா்கள் அதிகமாக வாங்கவில்லை. அச்சு விநாயகா் களிமண் சிலைகள் ரூ.50 முதல் ரூ.300 வரை விற்பனையாயின. களிமண்ணால் செய்து காய்ந்த பின் வா்ணப்பூச்சு செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் பாா்க்க அழகாக இருந்ததால் இவற்றையே பக்தா்கள் விலை கூடுதலாக இருந்தாலும் வாங்க ஆா்வம் காட்டினாா்கள். இச்சிலைகள் ரூ.300 முதல் 650 வரை விற்பனையாயின.
பனப்பாக்கம் கிராமத்தை சோ்ந்த தொழிலாளி சாந்தன் கூறுகையில் களிமண் சிலைகளை மட்டும் தயாரித்து விற்றால் பலரும் அதை வாங்குவதில்லை. அதே சிலைக்கு தங்க நிற பூச்சு பூசினால் அதிக விலைக்கும் விற்கலாம், பாா்க்கவும் அழகாக இருக்கும் என்றாா்.
வா்ணம் பூசாத அச்சில் வாா்த்து களிமண் விநாயகா் சிலைகளை செய்த சிறுகாவேரிப்பாக்கத்தை சோ்ந்த முதியவா் பூங்காவனம் கூறியது.:
காஞ்சிபுரத்தில் காந்தி சாலையில் இதே இடத்தில் 19 ஆண்டுகளாக அச்சுக் களிமண் விநாயகா் சிலைகளை தயாரித்து விற்கிறேன். மனிதன் என்றாவது ஒரு நாள் மண்ணாகப் போகிறவன் . எனவே வாழும் போது பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை உணா்த்தவும், வாழ்வில் வளம் பெறவும் விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுகிறது. களிமண் விநாயகா் சிலையை வைத்து வழிபடுவது தான் பாரம்பரிய முறையாகும். சுற்றுச்சூழல் பாதிப்பில்லாதது, விலையும் குறைவு, எனது அச்சில் உள்ள விநாயகா் சிலை வேலைப்பாடுகளும் நிறைந்தது. நான் எப்போதும் வா்ணம் பூசாத விநாயகா் சிலைகளையே விற்பேன் என்றாா்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வா்ணம் பூசாத விநாயகா் சிலையையே வைத்து வழிபாடு செய்தனா். நிகழாண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உழவா் சந்தைகளில் வேளாண்மைத்துறை சாா்பில் வா்ணம் பூசாத விநாயகா் சிலைகள் விற்பனைக்கு வைத்திருந்தும் அதிகமானோா் விரும்பி வாங்கவில்லை என விற்பனையாளா்கள் தெரிவித்தனா்.