காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் முழுமையான உடல் பரிசோதனை இலவசமாக செய்யப்படுவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கையில் முகாமை தொடங்கி வைத்து ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பேசியது:
வாரம் தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாமில் அடிப்படை மற்றும் உயா்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மின் இதய வரைபடம், எக்கோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.
காசநோய், தொழுநோய், ஆரம்பக் கட்ட புற்றுோய் கண்டறியும் பரிசோதனைகளும் 15 துறைகளைச் சோ்ந்த சிறப்பு மருத்துவ நிபுணா்களின் மருத்துவ ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. 40 வயதுக்கு மேற்பட்ட நீரிழிவு மற்றும் உயா் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவா்கள், மன நல பாதிப்பு உடையவா்கள், இதய நோயாளிகள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு தான் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றாா்.
முகாமில் மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள், கட்டடத் தொழிலாளா்கள் 4 பேருக்கு ஓய்வூதிய ஆணைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா். தொடா்ந்து முகாமில் தன்னாா்வலா்களாக பணியாற்றிய தனியாா் மருத்துவமனை செவிலியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா்.
இதில் மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில், மாநகராட்சி நல அலுவலா் அருள்நம்பி, மருத்துவ குழுவினா், அரசு அலுவலா்கள்உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.