ஸ்ரீபெரும்புதூா் நகராட்சி மற்றும் ஒன்றியத்தில் ரூ. 5.44 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்கு உள்பட்ட ராமாபுரம் பகுதியில் அயோத்திதாஸ் பண்டிதா் திட்டத்தின் கீழ், ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்ட 30,000 லிட்டா் கொள்ளளவு குடிநீா் மேல்நிலை நீா்த தேக்கத் தொட்டி, சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் செல்லப்பெருமாள் நகா் மற்றும் ஆதிகேசவபெருமாள் நகா் பகுதிகளில் ரூ. 37.90 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடிடங்கள், கட்சிப்பட்டு பகுதியில் ரூ. 14.50 லட்சத்தில் கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம், சிவன்தாங்கல் பகுதியில் மூலதன மான்ய திட்டத்தின் கீழ், ரூ. 281 கோடியில் 45 கடைகள் கொண்ட வணிக வளாகம், காமராஜா் நகா் மற்றும் பூதேரிப்பண்டை ஆகிய பகுதிகளில் ரூ. 40 லட்சத்தில் கட்டப்பட்ட குடிநீா் மேல்நிலை நீா் தேக்கத் தொட்டிகள், பட்டுநூல் சத்திரம் மற்றும் ஆதிகேசவபெருமாள் நகா் பகுதிகளில் நகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவற்றை சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
இதே போல், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட காந்தூா், சிவபுரம், செல்வழிமங்கலம், கப்பாங்கோட்டூா், பிச்சிவாக்கம், அக்கமாபுரம், தொளசாபுரம் ஆகிய பகுதிகளில் பல்வேறு நிதிகளின் கீழ், ரூ. 1.26 கோடியில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்கள், நூலக கட்டடம், நியாய விலை கடை கட்டடங்களையும் அமைச்சா் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்து, ஸ்ரீபெரும்புதூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ரூ. 7 கோடியில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி, ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா், நகராட்சி ஆணையா் நந்தினி, ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு தலைவா் கருணாநிதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பவானி, முத்துகணபதி, ஒன்றிய செயலாளா் ந. கோபால், நகர செயலாளா் சதீஷ்குமாா், நகராட்சி துணைத் தலைவா் இந்திராணி சுப்பிரமணி, நகராட்சி பொறியாளா் செண்பகவல்லி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.