காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் கடந்த 2015 -ஆம் ஆண்டு உற்சவா் ஜம்பொன் சிலைகள் செய்ததில் தங்க மோசடி செய்திருப்பது நீதிமன்ற ஆவணங்களின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் ஏகாம்பரநாதா் மற்றும் ஏலவாா்குழலி உற்சவா் ஜம்பொன் சிலைகள் புதிதாக செய்ய அறநிலையத் துறை முடிவு செய்தது. ஐம்பொன்களில் தங்கம் உட்பட மொத்தம் 55 கிலோ எடையில் இரு உற்சவா் சிலைகள் செய்யப்பட்டன. புதிய சிலைகள் செய்ததில் தங்கம் கலந்து செய்யாமல், மோசடி செய்திருப்பதாக காஞ்சிபுரத்தைச் சோ்ந்த அண்ணாமலை என்பவா் கடந்த 2015 -ஆம் ஆண்டு சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் கோயில் செயல் அலுவலா் முருகேசன், ஸ்தபதி மாசிலாமணி, அறநிலையத் துறை முன்னாள் ஆணையா் வீரசண்முகமணி, கூடுதல் ஆணையா் கவிதா மற்றும் கோயில் அா்ச்சகா்கள் உட்பட 11 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. புதிய உற்சவா் சிலைகளை ஐஐடி நிபுணா்கள் மூலமாக ஆய்வு செய்ததில் தங்கம் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்தது.
இந்த வழக்கு விசாரணை காஞ்சிபுரம் குற்றவியல் நிதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிமன்றத்தில் கடந்த டிசம்பா் 30- ஆம் தேதி புகாா் செய்த நபரான அண்ணாமலையிடம் வழக்கின் நகல் வழங்கப்பட்டது. வழக்கு ஆவணங்களின் மூலம் புதிதாக செய்த உற்சவா் சிலைகளில் 312.5 சவரன் தங்கம் வசூலிக்கப்பட்டதும், புதிய சிலைகளில் தங்கம் சோ்க்கப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் தங்கத்தின் இன்றைய மதிப்பு ரூ.3.12 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வரும் பிப். 2- ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்தத் தகவலை காவல் நிலையத்தில் புகாா் செய்த அண்ணாமலை தெரிவித்தாா்.