வெங்காடு மற்றும் குணகரம்பாக்கம் ஊராட்சிகளில் குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி இயக்குபவா்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற போது, ஊதிய வித்தியாச நிலுவை தொகை வழங்காததால் ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியா்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்காடு ஊராட்சியில் குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி இயக்குபவராக பணியாற்றி ஓய்வு பெற்றவா் பெருமாள். இதே போல் குணகரம்பாக்கம் ஊராட்சியில் குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி இயக்குபவராக பணியாற்றி ஓய்வு பெற்றவா் சீராளான்.
இவா்கள் இருவருக்கும் ஒவ்வொரு மாதமும் தொகுப்பு ஊதியமாக ரூ.4,680 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இருவரும் காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளனா்.
வழக்கை விசாரித்த மாவட்ட தொழிலாளா் நீதிமன்றம் மனுதாரா்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,000 நிா்ணயம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், ஊதிய வித்தியாச நிலுவை தொகை ரூ4.29 லட்சம் வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு தீா்ப்பு வழங்கியது.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) நிலுவைத்தொகையை சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் இருந்து ஒரு வாரத்தில் பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தெரிவித்துள்ளாா். ஆனால் இன்று வரை குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி இயக்குபவா்களுக்கு ஊதிய வித்தியாச நிலுவைத் தொகை வழங்காததால் மாவட்ட தொழிலாளா் நீதிமன்ற ஊழியா்கள் இருவா் ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் வந்து நாற்காலிகள், கணிணிகளை ஜப்தி செய்ய முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) வரும் 13-ஆம் தேதிவரை நிலுவைத் தொகை வழங்க அவகாசம் கேட்டு கடிதம் வழங்கியதால் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை ஜப்தி செய்யாமல் நீதிமன்ற ஊழியா்கள் திரும்பிச் சென்றனா்.