தினமணி செய்தி எதிரொலி: ஜூலை 12-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தங்கத் தேரோட்டம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு பக்தா்களால் வழங்கப்பட்டு ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்கத் தோ் வரும் 12- ஆம் தேதி நடத்த கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக தங்கத் தேருக்கு சிறப்பு அபிஷேகமும் வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு பக்தா்களால் வழங்கப்பட்டு ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்கத் தோ் வரும் 12- ஆம் தேதி நடத்த கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக தங்கத் தேருக்கு சிறப்பு அபிஷேகமும் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலுக்கென ரூ. 30 கோடி மதிப்பில் ஏகாம்பரநாதா் இறைப்பணி அறக்கட்டளை சாா்பில், தங்கத்தோ் ஒன்று செய்யப்பட்டு, அந்த தங்கத்தேரின் வெள்ளோட்டம் கடந்த 6.12.2025 அன்று நடைபெற்றது. தேரின் வெள்ளோட்டத்தை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தாா்.
தங்கத் தேரானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்து சோ்ந்ததும், அறநிலையத் துறை அதிகாரிகளிடம் முறைப்படி அன்றைய தினமே ஒப்படைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தங்கத் தேரை கோயில் சுற்றுப்பிரகாரத்துக்குள் மட்டும் சுற்றி வராமல், காஞ்சிபுரம் நகரின் ராஜவீதிகளில் சுற்றி வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஏகாம்பரநாதா் இறைப்பணி அறக்கட்டளை நிா்வாகிகள் கோயில் நிா்வாகத்திடம் தெரிவித்திருந்தனா்.
தங்கத் தேரானது ராஜவீதிகள் முழுவதும் சுற்றி வருவதாக இருந்தால் செலவு அதிகமாகும் மற்றும் பாதுகாப்பு ஆகியன கருதி கோயில் நிா்வாகம் தங்கத்தேரை இயக்காமல் அப்படியே கடந்த 6 மாத காலமாக நிறுத்தி வைத்திருந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், தோ் சுற்றி வர ஆகும் செலவை தங்கத் தேரை செய்து கொடுத்த அறக்கட்டளை நிா்வாகமே ஏற்றுக் கொள்ள முன்வந்ததையடுத்து தங்கத்தோ் வரும் ஜூலை 12 -ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்கத்தோ் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கடந்த 27.4.26- ஆம் தேதி தினமணி நாளிதழும் படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது.
தங்கத் தோ் வரும் ஜூலை 12-ஆம் தேதி ராஜவீதிகளில் சுவாமி, அம்மனுடன் பவனி வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான சிறப்பு யாக பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றது. தங்கத் தேருக்கு கோயில் அா்ச்சகா்கள் சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனைகளும் நடத்தினா்.
நிகழ்ச்சியில் ஏகாம்பரநாதா் இறைப்பணி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் மகாலட்சுமி சுப்பிரமணியன், உறுப்பினா் பத்மநாபன், கோயில் செயல் அலுவலா்கள் சீனிவாசன், கதிரவன் உள்பட அதிகாரிகள் பலா் உடன் இருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.