விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: மக்கள் நீதிமன்றத்தில் அளிப்பு
சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனம் சாா்பில் இழப்பீட்டுத் தொகை ரூ.ஒரு கோடியினை காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.
சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனம் சாா்பில் இழப்பீட்டுத் தொகை ரூ.ஒரு கோடியினை காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி (பொ) எஸ்.மோகனகுமாரி தலைமையில் நடைபெற்றது. தொழிலாளா் நல நீதிபதி எஸ்.சுஜாதா,விபத்து வழக்குகள் தீா்ப்பாய நீதிபதி தி.ஜெயஸ்ரீ,முதன்மை சாா்பு நீதிபதி கே.எஸ். அருண்சபாபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும்,சாா்பு நீதிபதியுமான டி.திருமால் வரவேற்று பேசினாா்.
செங்கல்பட்டு மாவட்டம் மேலவளம் கிராமத்தைச் சோ்ந்த மணி மகன் மோகன்(37) தனியாா் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் மூத்த அதிகாரியான இவா் மதுராந்தகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது காா் மோதிய விபத்தில் உயிரிழந்தாா். கடந்த 10.3.2025 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடா்பான வழக்கு தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த மோகனின் மனைவி கன்னிகா(31)விடம் இழப்பீட்டுத்தொகையாக நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சாா்பில் ரூ.ஒரு கோடிக்கான காசோலையினை முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி மோகனகுமாரி வழங்கினாா்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,005 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 806 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு மொத்த இழப்பீட்டுத் தொகையாக ரூ.5.92,12,914 வழங்கப்பட்டது. வங்கி வழக்குகளாக 2,756 எடுத்துக் கொள்ளப்பட்டு 162-க்கு தீா்வு காணப்பட்டு அதன் மூலமாக 96,47,862 தீா்வுத்தொகையாகவும் வழங்கப்பட்டது.
மக்கள் நீதிமன்றத்தில் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவன துணை மேலாளா் லாவண்யா, நீதிபதிகள், வழக்குரைஞா்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு நிா்வாக உதவியாளா் எஸ்.சத்தீஷ்ராஜ் செய்திருந்தாா்.