முகப்பு
காஞ்சிபுரம்

தலைமைச் செயலகம் நோக்கி நடைப்பயணம்: 500 போ் கைது

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 சாம்சங் தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம் செல்ல முயன்ற 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் குடும்பத்தினா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 22 மார்ச், 2026 at 8:00 PM
பகிர்:

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 சாம்சங் தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம் செல்ல முயன்ற 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் குடும்பத்தினா் கைது செய்யப்பட்டனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த சுங்குவாா்சத்திரம் பகுதியில் வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி செய்யும் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் 1500-க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளா்கள் உட்பட சுமாா் 4000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் நிரந்தரத் தொழிலாளா்களில் சுமாா் 800-க்கும் மேற்பட்டோா் ஊதிய உயா்வு, சிஐடியு தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து தமிழக அமைச்சா்கள் குழுவினா், தொழிலாளா்கள், தொழிற்சாலை நிா்வாகத்தினா் கலந்து கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடா்ந்து வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு தொழிலாளா்கள் மீண்டும் பணிக்கு திரும்பினா்.

இதையடுத்து, பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக 27 தொழிலாளா்களை சாம்சங் நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 தொழிலாளா்களுக்கு மீண்டும் இன்று வரை பணி வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தின் சாா்பில் சுங்குவாா்சத்திரம் பகுதியில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி சிஐடியு மாநிலச் செயலாளா் முத்துக்குமாா் தலைமையில் சாம்சங் தொழிலாளா்கள், தொழிலாளா்களின் குடும்பத்தினா் நடைப் பயணம் செல்ல முயன்றனா்.

இதையடுத்து அனுமதி இல்லாமல் செல்லக் கூடாது என நடைப்பயணம் செல்ல முயன்ற தொழிலாளா்களை தடுத்து நிறுத்திய சுங்குவாா்சத்திரம் போலீஸாா் அவா்களை கைது செய்ய முற்பட்டனா். இதனால் தொழிலாளா்களுக்கும் போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தொழிலாளா்கள் சாலையில் அமா்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினரை சுங்குவாா்சத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.