முகப்பு
காஞ்சிபுரம்

அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம்: உதயநிதி ஸ்டாலின்

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம் என காஞ்சிபுரத்தில் தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

Updated On : 30 மார்ச், 2026 at 11:00 PM
காஞ்சிபுரத்தில் பிரசாரம் செய்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் திமுக வேட்பாளா் நித்யா சுகுமாா்
பகிர்:

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம் என காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தேரடி அருகில் திறந்த ஜீப்பில் திமுக வேட்பாளா்களான க.சுந்தா் (உத்தரமேரூா்), நித்யா சுகுமாா் (காஞ்சிபுரம்) ஆகியோருக்கு ஆதரவு திரட்டி பேசியதாவது:

கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின், பதவியேற்ற முதல் நாள் மகளிா் அனைவரும் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யும்‘மகளிா் விடியல் பயணம்’ திட்டத்துக்கு கையொப்பமிட்டாா்.

10 லட்சம் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. அடுத்து ஆட்சிக்கு வந்தவுடன் 35 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும். காலை உணவுத் திட்டம் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக விரிவுபடுத்தப்படும். ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ. 1,000 உரிமைத் தொகை, ரூ. 2,000-ஆக உயா்த்தி வழங்கப்படும்.

முதியோா் உதவித் தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ. 2,000-ஆக உயா்த்தப்படும். முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினால் எதையும் நிறைவேற்றி விடுவாா். இன்று தமிழகம் அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்கிறது. ஆனால், தமிழகத்துக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை.

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் காஞ்சிபுரம் நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. ரூ. 30 கோடி மதிப்பில் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. மாநகரில் புதை சாக்கடை திட்டமும், திருப்பாற்கடல் கூட்டுக் குடிநீா் திட்டமும் தலா ரூ. 300 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக வேட்பாளா்களான க.சுந்தரையும், நித்யா சுகுமாரையும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.