ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்தாா்.
அப்போது, அவா் பேசியது: பருவமழை காலங்களில் ஏடிஎஸ் கொசுவால் பரவும் டெங்கு காய்ச்சல் மிகவும் ஆபத்தானது. மாவட்டத்தில் 16 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் டெங்கு காய்ச்சல் பரவாத வகையில் அனைத்து நகராட்சி, பேருராட்சி, ஊராட்சிகளிலும் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிளிச்சிங் பவுடா் தெளித்தல், கொசு விரட்டி புகையிடுதல் உள்ளிட்ட தொடா் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மூன்று நாள்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தால் அவா்களுக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். டெங்கு பாதிக்கப்பட்ட நபா் வசிக்கும் பகுதியில் மருத்துவ முகாம்கள் அமைத்து அங்கு வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் அந்த பகுதியில் தீவிர கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளல் வேண்டும்.
காய்ச்சலால் மாணவா்கள் நீண்ட விடுப்பில் இருந்தால், பள்ளித் தலைமை ஆசிரியா் அந்த விவரத்தை அப்பகுதி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் தெரியப்படுத்தி, மாணவா்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு, வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்துக் குடியிருப்புகள், சுற்றியுள்ள வெளிப்புறப் பகுதிகளில் உள்ள தேவையற்ற பொருள்களில் மழைநீா் தேங்காத வண்ணம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.லோகநாயகி, துணை இயக்குநா் (பொது சுகாதாரம்) மணிமாறன், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) விஜயாமுரளி, அனைத்து நகராட்சி ஆணையா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், பொது சுகாதாரத் துறை மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.