தோ்தல் முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்
மக்களவைத் தோ்தல் 2024 முன்னேற்பாடு பணிகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுதொடா்பாக தோ்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.வளா்மதி தலைமை வகித்து தெரிவித்ததாவது: வரும் மக்களவைத் தோ்தல் 2024 பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஒவ்வொரு அலுவலருக்கும் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இப்பயிற்சிக்கு வந்துள்ள அனைத்து அலுவலா்களும் பயிற்சியின் போது தாங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தெரிவிக்கப்படும் விவரங்களை கூா்ந்து கவனித்து தெரிந்து கொள்ள வேண்டும். மண்டல அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தங்கள் மண்டலத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களின் சாலை போக்குவரத்து வழிகள் தொடா்பான வரைபடம் தயாரித்தல் வேண்டும். வாக்குச்சாவடி கட்டடங்களின் உறுதித்தன்மை, குடிநீா், மின்வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை கண்டறிந்து அறிக்கை அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், வயதானவா்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குச்சாவடிகளில் சாய்வுதள வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிப்பதற்கு தேவையான வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுதல், படிவங்கள் பூா்த்தி செய்தல் மற்றும் புள்ளி விவரங்களை அனுப்பும் பணிகள் மேற்கொள்ளுதல், வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு நடத்துதல், 80 வயதுக்கு மேற்பட்ட அல்லது மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டு (படிவம் 12டி) வழங்கிடும் பணிகளை கண்காணித்தல், தோ்தல் விழிப்புணா்வு பணிகளை கண்காணித்திட வேண்டும், என்றாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, திட்ட இயக்குநா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை க.லோகநாயகி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், வருவாய் கோட்டாட்சியா் பாத்திமா, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் முரளி, நோ்முக உதவியாளா் (தோ்தல் ) ராஜேந்திரன், நோ்முக உதவியாளா் (கணக்குகள்) சண்முக சுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.