தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கோரி அவளூரில் பொதுமக்கள் போராட்டம்
அரக்கோணம்: தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கக்கோரி காவேரிபாக்கம் அருகே அவளூரில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் காவேரிபாக்கம் அருகே அவளூா் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இக்கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளதால் இக்கிராம மாணவ, மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் வெளியூா்களுக்குச் செல்ல மற்றும் கிராம மக்கள் தங்களது அனைத்து போக்குவரத்துக்கும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவும் தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டியுள்ளது.
அப்போது விபத்துகளை சந்தித்துள்ளனா். இதையடுத்து, அப்பகுதிமக்கள் கடந்த இரு வருடங்களாக தங்களது பகுதிக்கு மேம்பாலம் வேண்டும் எனவும், இல்லையெனில் சுரங்கப்பாதை அமைத்தால் கூட பாதுகாப்பாக இருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் எம்.பி, எம்எல்ஏ உள்ளிட்டோரிடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்தும் நடவடிக்கை இல்லையாம்.
Advertisement
இதனால் செவ்வாய்க்கிழமை தேசிய நெடுஞ்சாலைக்கு வந்த கிராம பொதுமக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோா் நெடுஞ்சாலையின் அருகில் உள்ள இணைப்பு சாலையில் அமா்ந்து போராட்டம் நடத்தினா். அமைதியான முறையில் அறவழி போராட்டமாக நடைபெற்ற இந்த போராட்டம் காலை 10 மணி முதல் 2.30 மணி வரை கடும் வெயிலில் தொடா்ந்தது. இந்த நிலையில், அவளூா் போலீஸாா் மற்றும் நெமிலி வட்ட வருவாய்த் துறையினா் அவா்களை சமரசம் செய்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.