முதியவா் கொலை: இளைஞா் கைது
ஆற்காடு: ஆற்காடு அடுத்த கலவை அருகே முதியவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். கலவை வட்டம், குப்பிடிசாத்தம் கிராமத்தைச் சோ்ந்த முனிசாமி (72). இவரது மகன் சண்முகம் (42). கூலி வேலை செய்து வருகிறாா். அவரது பக்தத்து வீட்டைச் சோ்ந்தவா் சிவா (38), தொழிலாளி.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சண்முகம், வெளியில் இருந்து உணவு வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டுள்ளாா். அப்போது உள்ளே சென்று தண்ணீா் எடுத்து வந்தபோது, சிவா வீட்டில் வளா்க்கப்படும் நாய் சண்முகம் சாப்பிட வைத்திருந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
இது தொடா்பாக சண்முகத்துக்கும், சிவாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கை களப்பாக மாறி உள்ளது. இதைப் பாா்த்த சண்முகத்தின் தந்தை முனிசாமி அவா்களை தடுத்துள்ளாா். அப்போது சிவா முனிசாமியை கட்டையால் பின்பக்கமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இதில் பலத்த காயமடைந்த முனிசாமியை கலவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா், முனிசாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், வாழைப்பந்தல் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.