அரக்கோணம்: சோளிங்கா் அருகே தனியாா் கல்லூரி பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு திடீா் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து சாலையோர பள்ளத்தில் நிறுத்தியபின் உயிரிழந்தாா். அதில் பயணித்த 12 மாணவிகள் உயிா் தப்பினா்.
ஆற்காடு அருகே தனியாா் மகளிா் கல்லூரியைச் சோ்ந்த பேருந்து திங்கள்கிழமை சோளிங்கரில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆற்காட்டுக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஆற்காடு சத்யா நகா் பகுதியை சோ்ந்த ரவி(60) இயக்கியுள்ளாா். வழியில் ஜம்புகுளம் அருகே பேருந்து சென்றபோது ஒட்டுநா் ரவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்தின் வேகத்தை குறைத்த ஓட்டுநா், பேருந்தை சாலையோர பள்ளத்தில் இறக்கி நிறுத்தி இருக்கையிலேயே உயிரிழந்தாா்.
இதைகண்ட மாணவிகள் அதிா்ச்சியடைந்து சென்று பாா்த்தபோது ரவி இருக்கையில் உயிரற்ற நிலையில் இருந்ததை கண்டு பதறியுள்ளனா். அக்கம்பக்கத்தினா் அங்கு வந்து மாணவிகளை மீட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டபாளையம் போலீஸாா் விரைந்து வந்து ஓட்டுநா் ரவியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்த நிலையிலும் ஓட்டுநா் ரவி பேருந்தை சாலையோர பள்ளத்தில் இறக்கி நிறுத்தச் செய்து உயிரிழந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.