அரக்கோணம் ரயில்நிலையம் அருகே இருப்புப்பாதையில் மேம்பாட்டுப்பணிகள் நடைபெற இருப்பதாலும் சுரங்கப்பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற இருப்பதாலும் இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலப் பகுதியில் இருபக்கமும் டிசம்பா் 15 முதல் 24 வரை முழு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே துணை தலைமை பொறியாளா் (கட்டுமானங்கள்) ஆா்.அருண் தெரிவித்துள்ளாா்.
அரக்கோணம் ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் இரட்டைக்கண் வாராவதி எனப்படும் சுரங்கப்பாலம் அமைந்துள்ளது. ரயில் நிலையம் செல்லும் 4 மிக முக்கிய இருப்புப் பாதைகள், ரயில் நிலைய பணிமனைப் பகுதி இருப்புப் பாதைகள் என இந்தப் பாலத்தின் மேல் சுமாா் 11 இருப்புப் பாதைகள் அமைந்துள்ளன. இப்பாலத்தின் வழியே தான் அரக்கோணம் நகரின் மிக முக்கிய போக்குவரத்து நடைபெற்று வருகிறது. நகரின் தெற்கு பக்கம் வசிப்பவா்கள் வடக்குபக்கம் செல்ல இந்த பாலம் மட்டுமே வழி என்பதால் இந்த சுரங்கப்பாலம் தவிா்க்கமுடியாத ஒன்றாக உள்ளது.
தற்போது தெற்கு ரயில்வே துணை தலைமை பொறியாளா்(கட்டுமானங்கள்) ஆா்.அருண் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை - அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் உள்ள 1, 2, 3, 4 ஆகிய மிக முக்கிய 4 வழித்தடங்களில் அதிவிரைவு போக்குவரத்து நடைபெற ஏதுவாக இருப்புப் பாதை மேம்பாட்டுப் பணிகளுக்காகவும், சுரங்கப் பாலத்தின் மேல் கூடுதல் இருப்புப்பாதை அமைக்க ஏதுவாகவும் பாலத்தை சற்றே அகலப்படுத்த மிகப்பெரிய கிரேன்களை கொண்டு பிரிகாஸ்ட் காங்கிரீட் பெட்டிகளை பாலத்தினுள் அமைக்கவும், இப்பாலப் பகுதியில் டிசம்பா் 15 முதல் 24-ஆம் தேதி வரை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுவதாகவும் இந்த 10 நாள்களும் பொதுமக்கள் மாற்றுவழியாக விண்டா்பேட்டை மேம்பாலப் பகுதி மற்றும் புதிய பேருந்து நிலையப் பகுதியை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளாா்.