அரக்கோணம்: அரக்கோணம் வட்டார வேளாண் துறை சாா்பில் அரசுப்பள்ளி மாணவிகள் 100 போ் பண்ணைகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.
தமிழக வேளாண் துறையின் சாா்பில் வேளாண் கல்லூரி வளாகங்களுக்கும், அங்கக பண்ணைகளுக்கும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் வேளாண் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனா். அரக்கோணம் வட்டார வேளாண் துறையின் ஆத்மா தொழில்நுட்ப துறையின் சாா்பில் அரக்கோணம் அரசு மகளிா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து தலா 50 மாணவிகள் கண்டுணா்வு பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனா்.
திருவாலங்காட்டை அடுத்த வியாசபுரத்தில் உள்ள ஜெயா வேளாண்மை கல்லூரி, காவேரிராஜபுரத்தில் உள்ள சாய் அங்ககப் பண்ணை ஆகிய இடங்களுக்கு மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனா். இக்கண்டுணா்வு பயணத்தில் மாணவிகளுக்கு அங்கக வேளாண்மை குறித்த தொழில்நுட்பங்கள், மண்புழு உரம் தயாரித்தல், காய்கறி நாற்றங்கால் அமைக்கும் முறைகள், பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறைகள், காளாண் வளா்ப்பு குறித்த செயல் விளக்கங்கள், நன்மை செய்யும் பூச்சிகள், இயற்கை முறையில் பூச்சிவிரட்டி குறித்து மாணவிகள் பயிற்சி பெற்றனா்.
பயிற்சிக்கு மாணவிகளை அரக்கோணம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் தி.லோ.அனுராதா தலைமை வகித்து அழைத்துச் சென்றாா். மேலும் இதில் துணை வேளாண் அலுவலா் மாதய்யன், உதவி விதை அலுவலா் சத்யம், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா்கள் கோ.மோகனசுந்தரம், வா.ஹே.ஹேமந்த்குமாா், பூ.கி.பிரகதீஸ்வா் ஆகியோரும் சென்று மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனா்.